இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்கும் விழா இன்று மாலை டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஏழு வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து இருக்கிறார்கள்.
மக்களவைக்கான தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடைபெற்று கடந்த 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு (203 இடங்கள்) மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகிறார் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த குமார் ஜுகனாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்து இருக்கிறார்கள்.
பிரதமர் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. முன்னதாக, நரேந்திர மோடி இல்லத்தில் இன்று தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை பிரதமருடன் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக அமைய உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாஜகவின் மனோகர் லால் கட்டார், சிவராஜ் சிங் சவுகான், சஞ்சய் குமார் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் தெலங்கானா பாஜக மாநில தலைவர் கிஷண் ரெட்டி, பியூஷ் கோயல், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேநீர் விருந்தில் அமித் ஷா, நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜூ, ஜோதிராதித்ய சிந்தியா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, நித்யானந்த் ராய், ஹர்ஷ் மல்ஹோத்ரா, சி.ஆர்.பாட்டீல், ஜித்தன் பிரசாத் ஆகியோரும் பங்கேற்றனர். இது தவிர, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், எல்ஜேபி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், ஆர்எல்டி கட்சியின் ஜெயந்த் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, ஜித்தன் ராம் மஞ்சி, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.