புத்னி மஞ்சியா இந்த பெயரை முதல் முறையாக கேட்பவர்களுக்கு யார் இவர் என்று தோன்றலாம். ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பழங்குடியின மனைவி என இந்திய அரசியல் வரலாற்றில் அறியப்பட்ட புத்னி மஞ்சியாவின் முகத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
புத்னி மஞ்சியா தன்னுடைய 80 வயதில் கடந்த 17ம் தேதி காலமாகிவிட்டார். ஆனால், அவரின் மறைவுச் செய்தி தற்போது தேசியளவில் ட்ரெண்டாகியுள்ளது. குறிப்பாக நேருவின் பழங்குடியின மனைவி காலமாகிவிட்டார் என்ற தலைப்புடன் எழுதப்படும் செய்தியால், புத்னி மஞ்சியாவின் கதை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1959 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் தாமோதர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பஞ்செட் அணையின் திறப்பு விழாவுக்காக அங்கு வருகை புரிந்தார். அப்போது அவரை வரவேற்க, அங்கு கூலி தொழிலாளியாக பணிப்புரிந்து வந்த சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த புத்னி மஞ்சியா மலர் மாலை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வுக்கு பிறகு நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த நேரு சென்றுவிட்டார். ஆனால், நேருவுக்கு மாலை அணிவித்த புத்னி மஞ்சியாவின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.
சந்தால் பழங்குடியினத்தை பொருத்தவரை பெண் ஒருவர் மாலைகளை ஒரு ஆணுக்கு அணிவித்தால் அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என அர்த்தம். இந்த பழக்கத்தினால் நேருவுக்கு மரியாதை நிமித்தமாக மாலை அணிவித்த புத்னி மஞ்சியா தன்னுடைய பழங்குடியின சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டார். காரணம் நேரு வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்! நாட்டின் பிரதமர் என்பதையெல்லாம் சந்தால் பழங்குடியின தலைவர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால், புத்னி மஞ்சியா கார்போலா கிராமத்திலிருந்து (இப்போது ஜார்க்கண்ட் பகுதி) வெளியேறி மேற்குவங்க மாநிலம், புரூலியா மாவட்டத்தில் உள்ள சால்டோட் என்னுமிடத்தில் குடியேறும் கட்டாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, சமீபத்தில் புத்னி மஞ்சியாவின் பேரன் தத்தா கூறுகையில், “ எனது பாட்டி அவளுடைய வாழ்க்கைக்காக கிராமத்தை விட்டு வெளியேறினார். அந்த நாளில் கிராமத்தில் வாழ்ந்துவந்த மூத்தவர்கள், காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகளை பின்பற்றி வந்தனர். அவள் அதற்கு பலியாகிவிட்டாள். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சால்டோடுக்குச் சென்ற அவர், அங்கு, அரசுக்கு சொந்தமான நிலக்கரிச் சுரங்கத்தில் ஒப்பந்த முறையில் வேலை செய்துவந்தார்.
அப்போது அங்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி வந்திருந்தார். அந்தசமயத்தில் மேற்குவங்க உள்ளூர் எம்.எல்.ஏ. ஒருவர், எனது பாட்டிக்கு நேர்ந்த துயரத்தை பற்றி அவரிடம் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து 1985-86 இல் எனது பாட்டிக்கு தாமோதர் வேலி கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த்த் தொழிலாளியாக வேலை கிடைக்க ராஜிவ்காந்தி காரணமாக இருந்தார் என்றார் தத்தா.
நேருவின் பழங்குடியின மனைவி என சொந்த கிராமத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட புத்னி மஞ்சியா, மேற்குவங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, சுதிர் தத்தாவை சந்தித்தார். பின்பு அவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரத்னா த்த்தா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இறப்பதற்கு முன்புதான் புத்னி மஞ்சியா, உறவினர்கள் வீட்டுக்கு சென்று வந்தார் என்று கூறிய தத்தா, அவர் கடைசிவரை மனநிறைவுடன் இருந்தார், வயது முதிர்வு தொடர்பான சிக்கல்களால் இறந்துபோனார் என்றார்.
“என் பாட்டிக்கு நேர்ந்தது தவறானது. ஆனால்,அவரது கடைசிகாலத்தில் அவர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இறக்கும் நேரத்தில் அமைதியாக இருந்தார்” என்று 43 வயதான பாபி தத்தா தெரிவித்தார். அவர் இப்போது தாமோதர் வேலி கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் உதவி எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். அவரது பாட்டியால் இந்த வேலை அவருக்கு கிடைத்துள்ளது.