Isreal Palestine war 
செய்திகள்

காசாமீது இன்னும் 7 மாதங்கள் போர் நடைபெறும் – இஸ்ரேல்!

பாரதி

காசாமீதான இஸ்ரேல் நடத்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று பல உலக நாடுகள் அறிவுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல், இன்னும் 7 மாதங்கள் காசாமீது போர் நடத்தப்படும் என்று அழுத்தமாக கூறியுள்ளது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வருகிறது. இதில் இதுவரை மொத்தம் 36 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே பல உலக நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று கூறின. ஆனால், இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டும்வரை ஓயமாட்டோம் என்று கூறியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல், காசாவின் எல்லைப் பகுதியான ரஃபா பகுதியில் தாக்குதலை நடத்தியது.

இதில் பல கொடூரச் சம்பவங்களும் நிகழ்ந்தன. குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தினால், உலக முழுவதும் All eyes on Rafah என்றப் பதிவு அதிக அளவு பகிரப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக உலக மக்கள் பதிவிடுகின்றனர் என்பதால், இஸ்ரேல் அதனைக் கருத்தில்கொண்டு கொஞ்சம் இறங்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இஸ்ரேல் இன்னும் 7 மாதங்கள் போர் நடைபெறும் என்று அடித்துக் கூறிவிட்டது. இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி கூறும்போது, "ஹமாஸ் அமைப்பையும், அதன் அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும். எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்துகிறது.

ஹமாசின் ஆயுதக் கடத்தல் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இஸ்ரேல். காசாவில் சண்டை இந்த ஆண்டு முழுவதும் தொடரும்.

பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் கோரியபடி போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. காசாவின் ரஃபா நகரில் சண்டையிடுவது அர்த்தமற்ற போர் அல்ல. காசாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதையும், ஹமாஸ் கூட்டாளிகள் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்துவதே நோக்கம்.” என்றார்.

காசா-எகிப்து எல்லையான ராஃபாவின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவம் கையில் எடுத்திருக்கிறது. ராஃபா பகுதியில் 14 கி.மீ நீளத்திற்கு எல்லை விரிவடைந்திருக்கிறது. இதனை தாண்டினால் எகிப்து சென்றுவிடலாம். அங்கு அகதியாக சென்றால் கூட உயிர் பிழைத்திருக்க முடியும். எனவே, பாலஸ்தீனர்கள் எகிப்து நோக்கி செல்ல முயன்று வருகின்றனர். இப்படி இருக்கையில் இஸ்ரேல் ராணுவம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி எல்லையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால், நிவாரணப் பொருட்கள் கூட ரஃபாவிற்குள் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT