விழுப்புரத்தில் யானை தந்தத்தால் ஆன நான்கு பொம்மைகள் சிக்கின. அதனை பேரம் பேசி விற்பனை செய்ய முயன்ற 12 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
யானை தந்தத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளை காரில் கடத்தி வந்து விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு விடுதியில் வைத்து விற்பனை செய்வதாக தமிழ்நாடு வனம் மற்றும் சென்னை மண்டல வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2.30 மணியளவில் தகவல் வந்துள்ளன.
அங்குள்ள அதிகாரிகள், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அறிவுரையின்பேரில் விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன், வனவர் சுகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர், அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த விடுதியின் முன் ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது. ஒரு மூட்டையுடன் 5 பேர் அதில் இருந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அந்த மூட்டையை திறந்துப் பார்த்ததில் பொம்மைகள் இருந்தன. அதிலிருந்த நான்கு பொம்மைகளுமே யானை தந்தத்தால் செய்யப்பட்டவை என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். மேலும் இவை தஞ்சாவூரில் செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பொம்மைகள் என்பதும் தெரியவந்திருக்கிறது. அந்த தங்கும் விடுதியின் அறையில் இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரையும் வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். பிடிபட்ட 12 பேரையும், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் இவர்கள் தஞ்சாவூர், திருச்சி, சேலம், ஒட்டன்சத்திரம், தர்மபுரியாகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்த பொம்மைகளை கடத்தி 7 பேரிடம் பேரம் பேசியிருக்கின்றனர். அவர்களை அந்த விடுதிக்கு வரவழைத்துள்ளனர். அவர்களிடம் காரில் வந்த 5 பேரும், யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை விற்பனை செய்ய முயன்றபோது வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த பொம்மைகளின் மதிப்பு 2 கோடி ஆகும். இதனையடுத்து இந்த பொம்மைகளை யார் கொடுத்தார்? யாரெல்லாம் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்? என விசாரணை செய்து வருகின்றனர்.