நாடாளுமன்றத்துக்கான புதிய உறுப்பினர்கள், நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தேர்தல் முடிவுகளின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு புதிய ஆட்சி அமைக்கும் சூலும் நிலவுகிறது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு, மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், வெற்றிகொள்ள முடியாத தலைவர் மோடி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு இருப்பதாக உலகின் பல்வேறு ஊடகங்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் சலசலப்பு ஒருபுறமும் கூட்டணிக் கட்சிளின் கோரிக்கை மற்றும் நிபந்தனைகள் மறுபுறமும் இவரது முன் நிற்க, வரும் 8ம் தேதி சனிக்கிழமை மோடியின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. 8ம் தேதி, சனிக்கிழமை, மோடிக்கு ராசி என பல்வேறு வகைகளில் ஆன்மிகத்தோடு உருவகப்படுத்தியும் சிலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், புதிய தகவலாக 8ம் தேதி சனிக்கிழமைக்கு பதில், 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார் என்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு இருக்கிறது. இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அரசு அதிகாரிகள் சென்றிருந்தபோது, பதவியேற்புக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதில் புதிய சிக்கல் என்னவென்றால், ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பதாக இருந்தது. தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி குறித்த புதிய தகவலால் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியை வரும் 12ம் தேதி மாற்றி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமாக சந்திரபாபு நாடு உள்ளதால் இவர் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமரும் வாய்ப்பை நரேந்திர மோடி பெற்றுள்ளார். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பதவியேற்பு எனும் முதல் நிகழ்ச்சியே மாற்றம் கண்டிருப்பதால், ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்றாகி விடக்கூடாது என்று பொதுமக்கள் முணுமுணுக்கிறார்கள்.