திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் யானை மிதித்து பாகன் உட்பட இரண்டு பேர் பலியாகியிருப்பது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகைத் தருகின்றனர். வெளியூர் வாசிகளின் வருகையும் இங்கு அதிகம். குறிப்பாக கார்த்திகை மாத விரதம் தொடங்கியுள்ளதால், பலர் மாலை அணிவதற்காக வருவார்கள். மேலும் இந்தக் கோவிலில் தெய்வானை என்ற யானை உள்ளது. இதற்கு வயது 25.
இது அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. விழா நேரத்தின் போது தெய்வானை யானை, பக்தர்களுக்கு ஆசி வழங்கும். பக்தர்களும் தெய்வானை யானைக்கு பழங்கள் மற்றும் காணிக்கையினை வழங்குவார்கள். முக்கிய விழா நிகழ்ச்சியின் போது அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாவிக்கும். இந்த யானையை உதயகுமார் என்ற பாகன் பராமரித்து வருகிறார்.
இப்படியானநிலையில், பாகன் உதயகுமார் இன்று யானைக்கு உணவளிக்க அதன் அருகே சென்றிருக்கிறார். அதேபோல் அவரின் உறவினரான சிசுபாலன் என்பவரும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போதுதான் யானை தெய்வானை இருவரையும் பலமாக மிதித்திருக்கிறது.
இவர்கள் இருவருடைய அலறல் சத்தம் கேட்டு கோவிலில் இருந்த அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்தனர். மேலும் கோவில் நிர்வாகிகளும் உடனே விரைந்தனர். ஆனால், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். பலத்த காயங்களுடன் உதயகுமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, யானை வளர்க்கும் இடத்தில் என்ன நடந்தது, இந்த உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிசுபாலன் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். என்றும் இல்லாமல் இன்று அவரது உறவினர் வந்திருக்கிறார். இப்படியான நிலையில் இருவரும் இறந்துள்ளது அங்கு பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கோவிலுக்கு வந்தவர்களும் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.