போதை மருந்து கடத்துபவர்களை சும்மாவிட மாட்டோம். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வது உறுதி என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
போதை மருந்து கடத்தலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மக்களவையில் அவர் புதன்கிழமை பதிலளித்தார்.
போதை மருந்து கடத்துபவர்களைக் கண்டுபிடிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எந்தெந்த வழிகளில் போதை மருந்துகள் கடத்தப்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
போதை மருந்து கடத்துபவர்கள் தப்பிக்க முடியாது. போதை மருந்துகளை பரிசோதிக்க 6 இடங்களில் ஆய்வகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. எனவே இவற்றை பரிசோதிக்க இனி காலதாமதமாகாது.
பாகிஸ்தானுடன் வர்த்தக உறவுகள் ஏதும் இல்லை. எனவே அங்கிருந்து இந்தியாவுக்குள் போதை மருந்துகள் கடத்தி வரப்பட வாய்ப்பில்லை. ஆனாலும் ட்ரோன்கள், சுரங்கப்பாதைகள், துறைமுகங்கள், விமானங்கள் மூலம் அவை கடத்திவரப்பட வாய்ப்புகள் உள்ளன.
நாடு முழுவதும் 472 மாவட்டங்களில் எந்தெந்த வழிகளில் போதைப் பொருள் கடத்தப்படுகிறது என்பதை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. மேலும் போதை மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருள்களுக்கும் தடைவிதிக்கப்படும்.
போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப் படுவதால் கிடைக்கும் லாபத்தை சில நாடுகள் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்க்க பயன்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்களை மோடி அரசு ஒருபோதும் பொறுத்துக் கொண்டிருக்காது. இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளில் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் ஷாஷ்ட்ர சீமா பால் உள்ளிட்டவை ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
கடத்தல்காரர்கள் மீது வழக்கு பதியவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்த தேசிய புலனாய்வுக் குழுவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.