‘தேசத்தின் முன்னேற்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜபேயி ஆற்றிய பங்கு அளப்பரியது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வாஜபேயியின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ‘21ம் நூற்றாண்டில் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேற வாஜபேயி முக்கியக் காரணமாக இருந்தார்’ என்றும் பிரதமர் தனது ட்விட்டர் (X) பதிவில் தெரிவித்துள்ளார்.
“வாஜபேயி தலைமையில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அவரது நினைவு நாளில் 140 கோடி மக்களுடன் இணைந்து நானும் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன். தேசத்தின் முன்னேற்றத்தில் வாஜபேயிக்கு முக்கியப் பங்கு உண்டு. அவரது பதவிக் காலத்தில்தான் பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்தது” என்றும் பிரதமர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜபேயியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
1924ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் பிறந்த வாஜபேயி, பல ஆண்டுகள் பாஜகவின் முகமாக இருந்தவர். தனது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் வாஜபேயி. முதலில் 1996ம் ஆண்டு மே 16ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். பின்னர் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1998ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் 2004ம் ஆண்டு மே 22ம் தேதி வரை அவர் பதவி வகித்தார். 1977 முதல் 1979 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் வாஜபேயி.
கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக வாஜபேயி காலமானார். ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் பிரதமர் வாஜபேயியை கெளரவிக்கும் வகையில் பிரதமர் மோடி, வாஜ்பேயி பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதியை, ‘நல்லாட்சி நிர்வாக தினமாக கொண்டாடப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி, டிசம்பர் 25ம் தேதி நல்லாட்சி நிர்வாக தினமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.