பொறியியல் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இந்தத் தர வரிசைப் பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிறுத்தொண்டநல்லூரைச் சேர்ந்த மாணவி நேத்ரா, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில், அவர் பொறியியல் படிப்புகளுக்கான இந்தத் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை அழைத்து நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் ஊக்கத் தொகையை வழங்கி கௌரவப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500 மாணவ, மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதும் தாங்கள் விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக நிறைய மாணவ, மாணவியர் தெரிவித்து இருந்தனர். அப்படிப் புறக்கணிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர்தான் ஸ்ரீவைகுண்டம், சிறுத்தொண்டநல்லூரைச் சேர்ந்த நேத்ரா. இவர்தான் இன்று வெளியான பொறியியல் கலந்தாய்வு தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்று இருக்கிறார்.