இன்று மணிப்பூரில் குகி ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் தற்போது வன்முறை வெடித்துள்ளது.
மணிப்பூரில் உள்ள குகி மற்றும் மெய்தி ஆகிய இனங்களுக்கு இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் 220 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 1,108 பேர் படுகாயமடைந்தனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல் 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகின, வன்முறைகள் தொடர்பாக ஏறதாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் பல காலங்களாக அமைதியான சூழலே நீடித்து வந்தது. செப்டம்பர் மாதத்தில் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது ஒரு படி மேலே சென்று ட்ரோன் மூலமும், ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் தாக்குதல் நடத்த துவங்கி உள்ளனர். இதில் 11 பேர் பலியாகினர். மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் பிரேண் சிங் இல்லம் மாணவர் சங்கத்தினரால் முற்றுகையிடப்பட்டது. மணிப்பூர் ஆளுநர் இல்லமும் முற்றுகையிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சமீபக்காலமாக மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதனையடுத்து இன்றும் கலவரம் அரங்கேறியது. ஜிர்பும் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏராளமான ஆயுதங்களுடன் இன்று (அக்.19) காலை உள்ளே நுழைந்த குகி ஆயுதக்குழுவினர் கிராமத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும், குண்டுகளையும் வீசியுள்ளனர்.
இதனை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் குகி ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதால் பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.