கேரளாவின் வயநாடு, கோடைக் காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும். ஆனால், இந்த வருடத்துக் கோடையில் அங்கே அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த முறை அமேதி, வயநாடு என்று இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, அமேதியில் மண்னைக் கவ்விய ராகுல் காந்தி, இந்த தடவை, அமேதியில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று வயநாட்டில் மட்டும் தஞ்சம் அடைந்தார்.
பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி வயநாடு உள்ளிட்ட அனைத்து கேரள தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்தது. கேரளா முழுவதிலுமாக 70 சதவிகித வாக்குப் பதிவு என்றாலும்,வயநாட்டில் வாக்குப்பதிவு 73 சதவிகிதம்.
கம்யூனிஸ்ட் தரப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவை களமிறக்கினார்கள். பா.ஜ.க.வும் தங்கள் கட்சியின் மாநிலத் தலைவரான சுரேந்திரனை வேட்பாளராக நிறுத்தியது.
ஆனி ராஜா, கடந்த மார்ச் மாதமே தனது பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டார். இரண்டு மாதங்களில் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் மொத்த தொகுதியிலும் ஆறு சுற்றுப் பிரச்சாரத்தை முடித்துவிட்டார் ஆனி ராஜா. குறிப்பாக மலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஆனி ராஜா வாக்கு சேகரிக்கச் சென்றபோது, ஏராளமான பெண் தொழிலாளர்கள் அவரைக் கட்டிப்பிடித்து, ஒரு சகோதரியைப் போல ஆதரவு தெரிவித்தார்கள் என்று பெருமையோடு சொல்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
அதேசமயம், “வயநாடு ஒரு பின் தங்கிய பகுதி. காட்டு விலங்குகள் மனிதர்களைத் தாக்குவது இங்கே மிக முக்கியமான பிரச்னை. ஏரியாவின் முன்னேற்றத்துக்கும் சரி, காட்டு விலங்குகள் தாக்குதல் பிரச்னைக்கும் சரி இந்தத் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தியும் சரி, இடதுசாரிக் கூட்டணி அரசும் சரி எதுவும் செய்யவில்லை. குறிப்பாக, கோடைக் காலம் வந்துவிட்டால், யானைகள் தண்ணீரைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளே வந்து விடும். அண்மையில் அப்படி வந்த ஒரு யானை, ஒரு விவசாயியைத் துரத்திச் சென்று மிதித்துக் கொன்றது இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது” என்று சொல்லுகிறார்கள் மலைப் பகுதி மக்கள்.
ராகுல் காந்தி இந்த முறை கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஏப்ரல் 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தவுடன், “இந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் என் தங்கை பிரியங்காவைப் போலவே எனது பாசத்துக்குரியவர்கள்; நீங்கள் எல்லோரும் எனக்கு, அப்பாக்கள்! அம்மாக்கள்! அக்கா, தங்கைகள், அண்ணன் தம்பிகள்!“ என்று ரொம்பவே சென்டிமென்டலாகப் பேசினார்.
ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்த பாராளுமன்றத் தொகுதி 2009ல் உருவாக்கப்பட்டது. பாரம்பரியமாக வயநாடு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைக் கொடுக்கும் ஒரு தொகுதியாக இருந்து வருகிறது. 2009, 2014 இரண்டு முறையும் இங்கே காங்கிரஸ் வெற்றி பெற்றதால்தான் கடந்த முறை, ‘பத்திரமான தொகுதி’ என்று ராகுல் இங்கே போட்டியிட்டார். ஏழு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று சுமார் நாலே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
வயநாடு சிறுபான்மை வாக்குகள் மிகுதியான ஒரு தொகுதி. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் கடந்த தேர்தலில் ராகுலின் பிரச்சாரப் பேரணியின்போது தங்கள் கொடிகளைப் பிடித்துக் கொண்டு வந்ததால், அதை பாஜக பாகிஸ்தான் கொடி என்று எதிர்மறைப் பிரச்சாரம் செய்தது. எனவே, இந்த தடவை ராகுலுக்கான பிரச்சாரங்களில் காங்கிரஸ் கொடிகள் மட்டுமே தென்பட்டன.
ராகுல் காந்தி வயநாட்டில் போட்டி இட்ட காரணத்தினாலேயே கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 16 இடங்களில் 15ஐ கைப்பற்றியது. கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகள் கூட காங்கிரஸ் வசமாயின. இந்தமுறை நிலைமை அத்தனை மோசமாக இருக்காது என கம்யூனிஸ்ட்டுகள் நினைக்கிறார்கள்.
வயநாடு தொகுதியில் விசித்திரம் என்னவெனில் பாஜகவை எதிர்த்து இண்டியா கூட்டணி அமைத்துள்ள எதிர்க் கட்சிகளின் அங்கமான இரு முக்கிய கட்சிகளான காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுக்கும் இடையில்தான் இங்கே கடுமையாக போட்டி.
“ராகுல் எப்படியும் ஜெயித்து விடுவார்; ஆனால் வாக்கு வித்தியாசம் போன தடவை மாதிரி இருக்காது” என்பதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.