விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அப்போது, சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த அவர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அவர் கூறினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. விளையாட்டு மைதானத்தில், வணிக வளாகத்தில் மது விற்பனைக்கு அரசு அனுமதியளித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச் சாராயம் தான் ஆறாக ஓடுகிறது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. எந்த சமூகப் போராளியும் நடிகரும் கள்ளச் சாராய மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பல பேர் சாராயத்தை பற்றி பாட்டு பாடினார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் தற்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விற்பனை செய்த சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எந்த வித கட்சி பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “செங்கல்பட்டு மாவட்டம் சித்தாம்பூர் பகுதியில் போலி மதுபானத்தை விற்பனை செய்ததன் மூலமாக அப்பாவி மக்கள் 5 பேர் இறந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் இதனை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டது. கள்ளச் சாராயம், போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் பிடிபட்டால் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தோம். இந்த 2 ஆண்டுகளில் கள்ளச் சாராய வியாபாரிகள் பெருகியுள்ளார்கள்” என்றார்.