City of Alaska 
செய்திகள்

“ஆயிரம் ஜென்னல் வீடு” – ஒரே கட்டிடத்தில் வசிக்கும் ஒரு முழு நகரம்!

பாரதி

உலகின் பல விசித்திர இடங்களில் ஒன்றுதான் இந்த நகரம். ஏனெனில் இந்த நகரத்து மக்கள் அனைவரும் ஒரே கட்டடத்தில்தான் வாழ்ந்து வருகிறார்களாம். அப்படி என்ன ஊரு அது?

இந்த நவீனக் காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் கூட குறைந்த அளவுதான் உள்ளன. ஆனால், சிலர் இன்றும் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டுமென்றே ஆசைப்படுகிறார்கள். ஏனெனில், அதன் மகத்துவமே தனித்துவம்தான். தனிமை என்பதே கிடையாது, வந்த துன்பங்களும் ஓடிப்போகும், மகிழ்ச்சியின் நிழலில் நிம்மதியான வாழ்க்கை. ஆனால், இந்த மாதிரியான குடும்பங்களை இப்போது எங்கு காண முடிகிறது?

ஆனால், இங்கு உறவுகள் அல்ல, அந்த நகரத்து மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரே கட்டடத்தில் வசிக்கின்றனர் என்பது புதுமைதானே. ஆகையால், இந்த இடம், 'ஒரு கூரையின் கீழ் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. அலாஸ்காவின் அழகிய மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் விட்டியர் நகரம்தான் அந்த தனித்துவமான நகரமாகும்.

ஏனென்றால், இந்த நகரத்தில் உள்ள மக்கள் தொகையில் 85% பேர் பெகிச் டவர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரே பல மாடி கட்டடத்தில் வசிக்கிறார்கள், இது ஒரு காலத்தில் பனிப்போர் இராணுவ வசதியாக இருந்தது. மீதமுள்ள 15 சதவீத மக்கள் விட்டர் மேனர் எனப்படும் இரண்டு மாடி தனியார் குடியிருப்பில் வாழ்கின்றனர்.

இப்படி இவர்கள் ஒரே இடத்தில் தங்குவதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான். இது ஒரு காரணமா? என்றுதானே யோசிக்கிறீர்கள்?

இப்போது உங்கள் ஊரில் அதிக மழை பெய்து, வெள்ளம் வந்து, அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றால், என்ன செய்வீர்கள். அரசை நம்பி, அவர்கள் அழைத்துச் செல்லும் இடத்தை நோக்கி செல்வீர்கள். அவர்கள் எங்கு அழைத்துச் செல்வார்கள்? அனைவரையும் ஒரு அரசு பள்ளியிலோ அல்லது சத்திரத்திலோ தங்க வைப்பார்கள். இல்லையா? அதேதான் இங்கும்…

ஒவ்வொரு ஆண்டும் இந்த இடம் சராசரியாக 5,000 மிமீ மழையைப் பெறுகிறது. பின்னர் பனிப்பொழிவு வருகிறது. இது சில நேரங்களில் 300 முதல் 400 அங்குலங்கள் வரை இருக்கும். டிசம்பரில் வெப்பநிலை -30° முதல் -34°C வரை செல்லும் மற்றும் பலத்த குளிர்ச்சியான காற்று உங்களை சிறிது நேரம் உணர்வின்மையாக்கும்,இது சில சமயங்களில் ஆண்டு முழுவதும் நீடிக்கும். மேலும் நல்ல சாலை இணைப்பு இல்லாததால் நகருக்குள் கூட பயணிப்பது கடினமாகும். 

இந்த குடியிருப்பு கட்டடத்தில் 14 மாடிகள் வரை உள்ளன. கிட்டத்தட்ட 153 படுக்கையறை, கிட்டத்தட்ட 270 மக்கள் ஒரு வீட்டில் வசிப்பது போல வாழ்ந்து வருகிறார்கள். இதனால், அங்கு வசிப்பவர்கள் அனைவரும் உறவினர்கள்தான். அங்கு தெரியாத முகம் என்று எதுவுமே இருக்காது.

கூடி வாழ்ந்து கோடி நன்மையையும் பெற்றுக்கொள்வார்கள். கட்டடத்தின் முதல் தளத்தில் ஒரு காவல் நிலையம், பள்ளி, தேவாலயம், சுகாதார மருத்துவமனை மற்றும் தேவையான அனைத்து கடைகளும் உள்ளன. குடியிருப்பாளரின் அன்றாடத் தேவைகளுக்காக, 'கோஸி கோர்னர்' என்ற மளிகைக் கடை உள்ளது. கடிதம் அல்லது பார்சலை எங்கு வேண்டுமானாலும் அனுப்ப சலவைத் துறை மற்றும் தபால் நிலையமும் உள்ளது.

சுரங்கப்பாதை நகரத்தின் ஒரே பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2019–2020 மாணவர் சேர்க்கையின்படி, பள்ளியில் சுமார் 48 மாணவர்கள் உள்ளனர். அதேபோல் எந்த நேரமும் அங்கு என்னவேண்டுமென்றாலும் நடக்கும் என்பதால், தீயணைப்பு துறையினர் போன்ற மற்ற துறையினரும் இருப்பார்கள்.

நினைத்துப் பாருங்களேன்… நாமும் இதுபோன்ற ஒரு கட்டடத்தில் ஒன்றாக வாழ்ந்தோமானால் எப்படியிருக்கும்?

வேண்டாம்… வேண்டாம்… இந்திய மக்களுக்கு எப்படி ஒரே கட்டடம் பத்தும்???

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT