மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நேற்று மதியம் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற பெண், பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், 300 அடி பள்ளத்தில் கார் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வெளியான காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சுளிபஞ்சன் என்கிற பகுதியில் 23 வயதான ‘ஸ்வேதா சர்வசே’ என்கிற பெண் தனது நண்பனிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது கார் ரிவர்ஸ் கியரில் இருந்துள்ளது, தொடக்கத்தில் காரை மெதுவாக நகர்த்திய அந்த பெண், திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், கார் மின்னல் வேகத்தில் பின்னோக்கி சீறிப்பாய்ந்து, தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது.
பின்னர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு செல்ல மீட்பு படையினருக்கு ஒரு மணி நேரம் ஆனது. காரில் இருந்த ஸ்வேதாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அந்த காணொளியில் முதலில் ஸ்வேதா காரை மெதுவாக பின்னோக்கி நகர்த்துகிறார். அவர் தனது நண்பர் வீடியோ எடுப்பதை கவனித்துக் கொண்டிருந்ததால் பின்னால் தடுப்புக்கு அருகே கார் செல்வதை அந்தப் பெண் கவனிக்கவில்லை.
திடீரென வீடியோவை பதிவு செய்து கொண்டிருக்கும் நபர் காரை நிறுத்தும்படி சொல்வதை அந்த காணொளியில் நாம் கேட்கலாம். அப்போது பிரேக் அழுத்துவதற்கு பதிலாக தெரியாமல் ஆக்சிலரேட்டரை அழுத்தி விடுவதால், காரின் வேகம் அதிகரித்து கண நேரத்தில் பள்ளத்தாக்கில் கார் விழுவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த காணொளியை பார்ப்பதற்கே படபடப்பாக இருக்கிறது.
Instagram ரீல்ஸ் வீடியோ எடுக்கும் மோகத்தில் 23 வயது பெண் தனது உயிரை விட்டிருப்பது, மகாராஷ்டிராவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சமூக வலைதளங்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.