செய்திகள்

பெண்கள் மாடலிங் செய்யத் தடை: சீன அரசுக்கு எதிராக சர்ச்சை!

கல்கி டெஸ்க்

மீப காலங்களில் சீனக் குடிமக்களுக்கு அந்நாடு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பொது இடங்களில் போராட்டம் நடத்தத் தடை, அரசுக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துகளுக்குத் தடை, சமூக வலைதளங்களுக்கு கடுமையான தணிக்கை உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகளை அந்நாடு மக்களின் மீது விதித்துள்ளது. இவை அந்நாட்டுப் பொதுமக்களிடம் கடுமையான ஆட்சேபனைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் சீன அரசு அந்நாட்டுப் பெண்களிடம் தற்போது புதிய ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதாவது, சீனாவில் மாடலிங் செய்யும் பெண்கள் உள்ளாடை தொடர்பான விளம்பரப் படங்களில் நடிப்பதற்கும், லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் தடை விதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ளாடை விளம்பரங்களில் பெண்களுக்கு பதில் ஆண்களே தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை குறித்து அந்நாட்டு உள்ளாடை நிறுவனம் ஒன்று கூறுகையில், 'எங்களுக்கு வேறு வழியில்லை. இதனாலேயே சமீப நாட்களாக ஆண் மாடல்களை உள்ளாடை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை அங்கு லைவ் ஸ்ட்ரீமிங் காட்சிகளுக்கான வர்த்தகம் மிகவும் அதிகம் என்று அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே லைவ் ஸ்ட்ரீமிங்கை புறக்கணிக்காமல் ஆண்கள் பலர் தற்போது பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளுக்கு மாடல்களாக நடித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, பெண்களுக்கு பதிலாக ஆண்கள் நடிக்கும் விளம்பரங்கள் டிக் டாக்கில் ட்ரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆபாசமாக வெளியிடப்படும் வீடியோக்களைத் தடுக்கவே இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக சீன அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘இது பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல்’ என்று அந்நாட்டுப் பெண்கள் நல அமைப்புகள் பலவும் குரல் எழுப்பி வருகின்றன. இந்தத் தடை சீன நாட்டு மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT