பெரம்பலூர் அருகே கழுத்தில் டாட்டு குத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இளைஞர்கள் மத்தியில் டாட்டூ குத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் கண்முன் தெரியாமல் உடலில் உள்ள அனைத்து இடங்களிலும் டாட்டூ குத்தி கொள்கிறார்கள். அப்படித்தான் இந்த டாட்டூ ஒரு இளைஞரின் உயிரை பறித்துள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி- தனுஷ்கோடி தம்பதி. அதே ஊரில் டீக்கடை நடத்தி வரும் இவர்களது இரண்டாவது மகன் 22 வயதான பரத்.
இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படித்து வந்தார். பின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு விவசாய வேலைகளை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றார் பரத்.
அங்கு அவர்களுடன் சேர்ந்து கழுத்து பகுதியில் நங்கூரம் டாட்டு குத்திக் கொண்டுள்ளார். கழுத்தில் டாட்டு குத்தும்போது அது சரியாக பதிவாகவில்லை என்று கூறி மறுமுறையும் அதே இடத்தில் டாட்டு குத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிய பரத்திற்கு சில தினங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் கையின் அக்குள் பகுதியில் கட்டி ஏற்பட்டுள்ளது. இதனை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காண்பித்த பொழுது மருத்துவர் கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறி சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றி உள்ளார்
அதன் பிறகு உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்த பரத் மீண்டும் மருந்து வாங்குவதற்காக அரியலூர் சென்ற பொழுது மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். டாட்டு குத்தியதால் கழுத்து பகுதியில் உள்ள முக்கியமான நரம்பு பகுதி பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
ஆசைக்காக குத்தப்பட்ட டாட்டூவால் ஒரு உயிர் பறிபோனது பற்றி தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அவரது தந்தை, குத்திய இடத்திலேயே 2வது முறை டாட்டூ குத்தியதால் கழுத்தில் உள்ள நரம்பில் கெமிக்கல் இறங்கியதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார். இந்த கழுத்து நரம்பு தலை முதல் கால் வரை செல்லும் என்றும் அதில் டாட்டூ குத்தினால் உயிருக்கே ஆபத்து என்றும் கூறினார். மேலும், என் மகனை நான் இழந்துவிட்டேன் வேறு யாரும் இது போன்று செய்யாதீர்கள் என கண்ணீர் மல்க பேசினார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர், கழுத்து நரம்பு என்பது உடலில் ஒரு முக்கியமான நரம்பு என்றும், அதில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் கை, கால் செயலிழக்க கூடிய அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்தார். இளைஞர்கள் இது போன்ற முயற்சியில் ஈடுபடும் போது உடலில் அக்கறை செலுத்துவது நல்லது என்றும் தெரிவித்தார். டாட்டூ போடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. டாட்டூவால் இனி ஒரு உயிர் கூட போக கூடாது என இளைஞர்கள் முன் வர வேண்டும்.