Low-Code/No-Code 
அறிவியல் / தொழில்நுட்பம்

எல்லாரும் சாஃப்ட்வேர் உருவாக்கலாம் - எப்படி?

என். சொக்கன்

என்னுடைய நண்பர் ஒருவர் சிறுதொழில் ஒன்றைத் தொடங்கி நடத்துகிறார். அவருக்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் பலர் உள்ளார்கள். அவர்களுக்குத் தன்னுடைய நிறுவனத்தைப்பற்றித் தெரியப்படுத்துவதற்கும், புதிய வெளிநாட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் அவர் ஓர் இணையத் தளத்தைத் தொடங்கி நடத்த விரும்புகிறார்.

பத்து ஆண்டுகளுக்குமுன்னால் என்னுடைய நண்பருக்கு இப்படி ஓர் ஆசை வந்திருந்தால், அவர் இணையத் தள வடிவமைப்பு நிறுவனம் ஒன்றைத் தேடிச் சென்றிருப்பார். அவர்கள் இவருடைய தேவைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி ஓர் இணையத் தளத்தை உருவாக்கித் தந்திருப்பார்கள். இவர் அதைப் பார்த்து வேண்டிய மாற்றங்களைச் சொல்லியிருப்பார். அதன்பிறகு, தளம் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். இதற்கெல்லாம் சுமார் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

ஆனால் இப்போது, என்னுடைய நண்பர் ஒரு சனிக்கிழமை காலை தன்னுடைய இணையத் தளத்துக்கான வேலையைத் தொடங்கினார். அன்று மாலை அவருடைய தளம் இணையத்தில் ஏற்றப்பட்டுவிட்டது. அதாவது, சில மாதங்கள் வேலை சில மணிநேரங்களில் முடிந்துவிட்டது.

இத்தனைக்கும் என்னுடைய நண்பர் மென்பொருளாளர் இல்லை, அவருக்கு இணைய வடிவமைப்பு தெரியாது. சொல்லப்போனால், அவரிடம் ஒரு கணினிகூட இல்லை. ஆனாலும் அவர் தன்னுடைய இணையத் தளத்தைத் தானே உருவாக்கிவிட்டார். எப்படி?

இன்றைக்கு இதுபோன்ற சிக்கலில்லாத, எளிய இணையத் தளங்களை உருவாக்குவதற்குச் சிறப்பு வல்லுநர்கள் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் சில கிளிக்குகளில் இணையப் பக்கங்களை உருவாக்கலாம், படங்களை, எழுத்துகளை, வீடியோக்களை அங்கும் இங்கும் நகர்த்தி மாற்றி விளையாடலாம், ஒவ்வொரு பக்கத்தையும் தன்னுடைய விருப்பம்போல் மாற்றியமைத்து இணையத்தில் வெளியிட்டுவிடலாம். அதற்கான எளிமையான கருவிகள் இப்போது கிடைக்கின்றன.

இணையத் தளம்தான் என்றில்லை, முன்பு நிரல்கள் (Program/Code) மூலமாக எழுதப்பட்ட பல மென்பொருட்களை இப்போது யார் வேண்டுமானாலும் எளிதில் உருவாக்கலாம் என்கிற சூழல் வந்துவிட்டது. ஒரு மருத்துவரோ, நிதி அலுவலரோ, கடை நடத்துபவரோ, முடி திருத்துபவரோ தன்னுடைய தொழிலுக்குத் தேவையான தேவைகளைக் குறிப்பிட்டு ஒரு வரிகூட நிரல் எழுதாமல் தனக்கான மென்பொருளை உண்டாக்கிவிடலாம். இதைப் பொதுமக்களின் நிரலெழுதல் (Citizen Programming) என்று அழைக்கிறார்கள்.

அப்படியானால், இனிமேல் நிரலெழுதுவதற்கென்று தனியாக மென்பொருளாளர்கள் யாரும் தேவையில்லையா?

பொதுமக்கள் தங்களுக்கான மென்பொருட்களைத் தாங்களே உருவாக்கிக்கொள்ள உதவும் நிரலில்லா (No-Code) அல்லது குறைந்த அளவு நிரல் கொண்ட (Low-Code) கருவிகள் எளிய, அடிப்படையான மென்பொருட்களைத்தான் உருவாக்க உதவும். அதைவிடச் சிக்கலான மென்பொருட்களுக்கு அதை ஒரு துறையாக எடுத்துப் படித்துப் பயிற்சி பெற்ற மென்பொருளாளர்கள் தேவைப்படுவார்கள். இந்த இருவகை நிரலெழுதுதலுக்கும் நாளைய உலகில் தேவை இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு காஃபி, தேநீர் தயாரிப்பது, தோசை சுடுவது, இட்லி வேகவைப்பது போன்றவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், பொரியல், கூட்டு, இனிப்பு என்று முழு நீள உணவைச் சமைப்பதென்றால் அந்தக் கலையில் வல்லவர்கள் தேவைப்படுகிறார்கள். அதுபோல, எளிய மென்பொருட்களை அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் தாங்களே உருவாக்கிக்கொள்ளப் பழகிவிட்டால், மென்பொருள் பொறியாளர்களுக்கான வேலைப்பளு குறையும். அவர்கள் சிக்கலான மென்பொருட்களில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை இன்னும் நன்றாக உருவாக்குவார்கள்.

அதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்கிறவர்களை Citizen Programmers ஆகும்படி ஊக்குவிக்கின்றன, அதற்கான கருவிகளை வாங்கிக் கொடுத்து, பயிற்சி தந்து ஆதரிக்கின்றன. அதன்மூலம் பல புதுமைப் படைப்புகள் உருவாகும், நம்முடைய செயல்திறனும் விரைவும் கூடும் என்பது இவர்களுடைய நம்பிக்கை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT