உலகப்புகழ் பெற்ற ஓவியர், விஞ்ஞானி லினோர்டோ டாவின்சி முதன் முதலாக 'ரோபோ' எனும் இயந்திர மனிதனின் வடிவத்தை கற்பனை சித்திரமாக வரைந்தார்.
1954 ம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜ் டுவல் மற்றும் ஜோ எங்கல் பட்ஜெட் எனும் இன்ஜினியர்கள்தான் முதல் முறையாக கைகள் இயங்கும் வண்ணம் அமையப்பெற்ற முதல் இயந்திர மனிதனை உருவாக்கினார்கள். இது முதல் முறையாக அபாயகரமான பணிகளை செய்ய உருவாக்கப்பட்டு, அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டது.
ஆங்கில திரைப்பட நடிகை 'சார்லெட் ஜோனாசன்' போன்ற உருவத்தில் முதல் முறையாக ஒரு பெண் ரோபோவை 'மார்க் 1' எனும் பெயரில் 35,000 டாலர்கள் மதிப்பில், 18 மாத உழைப்பில், ஹாங்காங் நாட்டின் கிராபிக்ஸ் டிசைனர் ரிக்கி மா உருவாக்கினார். இது ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை முகத்தில் காட்டிய முதல் ரோபோ.
அமெரிக்க ராணுவத்திற்கென 'அட்லஸ்' எனும் 6அடி 2 அங்குலம் 156 கிலோ எடையில் ஒரு ரோபோவை 'கூகுள் பாஸ்டன் டைனமிக்ஸ்' நிறுவனத்தினர் தயாரித்தனர். இது வெளியே உள்ள மண்ணின் தன்மை, இடத்தின் தன்மையை இனம் கண்டு வேலை செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது.
மணிக்கு 6 கிமீ தூரம் நடக்கும், ஓடும் விதத்தில் 'அசிமோ' எனும் ரோபோவை ஜப்பானின் 'ஹோண்டா நிறுவனம்' தயாரித்தது. இது மற்றவர்களின் தேவை அறிந்து உணவு பரிமாறும் பணிக்காக உருவாக்கப்பட்டது. இதன் உயரம் 1.28 மீ, 56 கிலோ எடை கொண்டது. உலகெங்கும் முதலில் 100 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன.
2009 - 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கமிஷன் இணைந்து 1.40 மீ உயரத்தில் 40 கிலோ எடையில் 8 வயது குழந்தை வடிவில் 'ரோமியோ' என்ற பெயரில் ஒரு ரோபோவை உருவாக்கியது . இது மனிதர்களை போல கட்டிப்பிடிக்கும், மனிதர்களின் குறைகளை காது கொடுத்து கேட்கும். சில ஆரோக்கியமாக குறைபாடுகளுக்கு யோசனை சொல்லும் படி உருவாக்கப்பட்டது. ரோபோ உருவாக்கத்தில் இது புரட்சி ஏற்படுத்தியது.
2014 ம் ஆண்டு அமெரிக்காவின் மேக்ஸ் பிளாங்க் இண்டலிஜெண்ட்ஸ் சிஸ்டம் நிறுவனம் 'ஆதினா' எனும் பெயரில் ஒரு ரோபோவை தயாரித்தது. இது மனிதர்களை போலவே அனைத்து வேலைகளையும் செய்யும். இது உலகிலேயே முதல்முறையாக விமானத்தில் ஒரு பயணியை போன்ற தோற்றத்தில், டி சர்ட் மற்றும் காலில் சிகப்பு சூ சகிதமாக, எக்கனமி கிளாசில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஜெர்மனியின் பிராங்பார்ட் நகருக்கு, 17 டிசம்பரில் 2014 அன்று பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணித்தது.
குழந்தை இல்லாத ஜப்பான் பெண்மணிகளுக்கு ஒரு குழந்தை போன்ற தோற்றத்தில் 'கிரோபேமினி' எனும் ரோபோவை சிறு குழந்தை வடிவில் தயாரித்தது ஜப்பானின் டொயோட்டா நிறுவனம். ஜப்பானிய பெண்கள் நூற்றுக்கணக்கில் இதை வாங்கி தங்களது குழந்தை இல்லாத ஏக்கத்தை தவிர்த்துக் கொண்டனர் அப்போது.
சீனாவின் செங்கை மாகாணத்தில் 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுக்கமுழுக்க ரோபோக்கள் மூலம் இயங்கும் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதுவிதமான இயந்திர மனிதனை 2023 ம் ஆண்டு உருவாக்கியுள்ளனர். அந்த இயந்திர மனிதனால் சுவாசிக்கவும், நடுங்கவும், வியர்க்கவும் முடியும்.வெப்பத்தால் மனிதனுக்கு நேரும் பாதிப்பை அளவிட விஞ்ஞானிகளின் அண்மை கண்டுபிடிப்பு தான் 'எண்டி' எனும் சுவாசிக்கும் இயந்திர மனிதன். 'எண்டி' யின் உட்புற குளுமை இயக்கமும் சருமத் துளைகளும் சுவாசிக்கவும் வியர்க்கவும் துணை புரிகின்றன. இதன் உடலில் 35 தனித்தனி வெப்பப் பகுதிகள் உள்ளன. மனிதனைப் போலவே, இதற்கும் முதுகில்தான் அதிகமாக வியர்க்கும். 'எண்டி'யை உருவாக்க அரை மில்லியன் டாலருக்குமேல் செலவானதாம்.