இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போனின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். பிறருடன் பேசுவது, அரட்டை அடிப்பது, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது என எல்லாவற்றிற்கும் ஸ்மார்ட் ஃபோனையே நம்பி உள்ளோம். இருப்பினும் ஒரே ஸ்மார்ட்போனை நீண்ட காலம் பயன்படுத்தும்போது அதன் செயல்திறன் குறையும் சிக்கலை நீங்கள் சந்திக்கலாம். இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு எளிய தீர்வுகளில் ஒன்று உங்கள் ஸ்மார்ட் போனை ரீஸ்டார்ட் செய்வதாகும். மேலும் ரீஸ்டார்ட் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது.
மெமரி சுத்தமாதல்: ஸ்மார்ட் போனை அதிக காலம் பயன்படுத்துவதால் அதில் தேங்கி இருக்கும் தற்காலிக கோப்புகள், மெமரியில் அதிகமாக குவிந்திருக்கும். அவை உங்கள் சாதனத்தின் செயல்திறனை பாதிக்கலாம். எனவே உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வது மூலமாக இதுபோன்ற தேவையில்லாத கோப்புகள் முற்றிலுமாக அழிந்து, அதன் பிராசசர் புதுப்பிக்கப்படுகிறது.
மென்பொருள் பிரச்சனைகள் தீரும்: மென்பொருள் குறைபாடுகள் மற்றும் பிழைகள் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள். இவற்றால் உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் ஆப்ஸ் செயலிழப்பது, திடீரென ஹேங் ஆவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் ஸ்மார்ட் போனை ரீஸ்டார்ட் செய்வதால் இதுபோன்ற மென்பொருள் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் சரியாகும்.
பேட்டரி ஆயுள் மேம்படும்: ஸ்மார்ட் போன் பேட்டரியின் ஆயுள் காலப்போக்கில் பாதிக்கப்படலாம். இதனால் பேட்டரியின் செயல்திறன் குறைந்து, விரைவாக சார்ஜ் காலியாகும் பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடலாம். சில நேரங்களில் பேக்ரவுண்டில் சில ஆப்ஸ் இயங்கிக் கொண்டிருப்பதால் பேட்டரியின் ஆயுள் குறையும். இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்தாலே போதும், தேவையில்லாமல் உங்கள் பேட்டரியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தும் அகற்றப்படும்.
சிறந்த நெட்வொர்க் இணைப்பு: மெதுவான இணையவேகம் அல்லது Wi-Fi போன்ற நெட்வொர்க் சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், ஒருமுறை போனை ரீஸ்டார்ட் செய்தால் போதும், புதிய இணைப்பைத் தூண்டி நெட்வொர்க் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். மேலும் இப்படி செய்வதால் உங்கள் சாதனத்தின் இணைப்பை பாதிக்கக்கூடிய தற்காலிக நெட்வொர்க் சார்ந்த சிக்கல்களும் தவிர்க்கப்படும்.
இதுமட்டுமின்றி உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் ஒட்டுமொத்த செயல் திறனும் அதிகரிக்கும். குறிப்பாக ஸ்மார்ட் போனில் உள்ள தேவையில்லாத விஷயங்கள் அனைத்தும் நீக்கப்படுவதால், முன்பை விட உங்களது சாதனம் வேகமாக இயங்கும். எனவே வாரம் ஒரு முறையாவது உங்களது ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.