Online Loan Apps 
அறிவியல் / தொழில்நுட்பம்

கடன் கொடுத்துவிட்டு மிரட்டும் ஆன்லைன் செயலிகள்: வேண்டாம் இந்த விபரீதம்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

இன்று உலகம் முழுவதையும் இணையதளம் தான் ஆள்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களைப் பார்ப்பதும் அரிதாகி விட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய வசதிகளின் காரணமாக பல நன்மைகள் நடந்தாலும், இதன் மூலம் சில தீமைகளும் அரங்கேறி வருவதை யாராலும் மறுக்க முடியாது. ஸ்மார்ட்போன் வருகைக்குப் பின் ஆன்லைனில் மூழ்கி அழியத் தொடங்கியது இன்றைய இளம் தலைமுறை. ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களும், சமூக வலைதளங்களில் வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் அவசரத் தேவைக்கு பணம் இல்லையென்றால் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் கடன் வாங்குவோம். இதையும் தாண்டி வட்டிக்கு கூட கடன் வாங்குவோம். ஆனால், ஸ்மார்ட்போன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் இன்றைய சூழலில் ஆன்லைனிலேயே கடன் வாங்குகிறார்கள் இன்றைய இளைஞர்கள். அதற்கேற்ற படி ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகளும் அதிகரித்துள்ளன. ப்ளே ஸ்டோரில் சென்று தேடிப் பார்த்தால், எண்ணற்ற கடன் வழங்கும் செயலிகள் கொட்டிக் கிடக்கின்றன.

மிக எளிதாக ஆன்லைனில் கடன் கிடைக்கிறதே என இளைஞர்களும் அவர்களின் வலையில் விழுந்து விடுகின்றனர். ஆன்லைனில் கடன் வாங்க வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் மட்டுமே போதுமானதாக இருப்பதாலும், எங்கும் அலையாமல் உடனடியாக கடன் கிடைப்பதாலும் பலரும் கடன் செயலிகளில் பதிவு செய்து கடன் வாங்கத் தொடங்குகின்றனர். கடன் தொகையை திருப்பி அளித்த பிறகும், இன்னும் வட்டித்தொகையை செலுத்த வேண்டும் என தொலைபேசியில் மிரட்டுகிறார்கள் கடன் செயலியில் வேலை பார்க்கும் ஊழியர்கள். வட்டி செலுத்தவில்லை என்றால் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பகிரவும் இவர்கள் துணிகிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இளைஞர்கள் தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள்.

நம்முடைய பயம் தான் அவர்களுக்கு பலத்தைத் தருகிறது. ஆகையால் முதல் வேலையாக பயத்தைக் கைவிடுங்கள்.

தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்கு தைரியம் உள்ளவர்கள், அதனை எதிர்த்து போராட அந்த தைரியத்தைப் பயன்படுத்த வேண்டும். இம்மாதிரியான சூழலில் எதற்கும் அஞ்சாமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும், நிலைமையை பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்வதால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

ஆன்லைன் கடன் செயலிகளின் பின்னால் சீனர்கள் தான் உள்ளனர் என மாநில சைபர் கிரைம் போலீஸ் கூறியுள்ளது. சீனர்களால் தான் இந்தியாவில் மனித உயிர்கள் பலியாகின்றன. கடன் செயலியின் மூலம் சுரண்டப்படும் பணம் அனைத்தும் சீனாவுக்கு செல்கிறது. இதன் பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்குவதை அறவே தவிர்த்து விட வேண்டும். அவசரத் தேவை ஏற்பட்டால் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடத்தில் உதவியை நாடுங்கள். இல்லையெனில் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகளில் கூட கடன் பெற முயற்சிக்கலாம். ஆனால், எளிதாக கிடைக்கிறது என ஆன்லைனில் கடன் வாங்கி வாழ்வை இழக்க வேண்டாம். ஏற்கனவே நாம் பல உயிர்களை இழந்து விட்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT