மருத்துவத் துறையில் நாம் அபார வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இதிலும் நுட்பமான விஷயங்களில் அதீத வளர்ச்சி என்று சொல்லலாம். அதில் ஒன்றுதான் சி.டி.ஸ்கேன். இந்த சிடி ஸ்கேன் எப்பொழுது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? அதன் பயன்பாடுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கண்ணுக்குத் தெரியாத உடல் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது சி.டி ஸ்கேன். எக்ஸ்ரேயால் காண முடியாத நுண்ணிய விஷயங்களைக் கூட இது சொல்லி விடும். இந்த சி.டி. ஸ்கேன் (Computed Tomography Scan) முறையையும், அதற்கான கருவியையும் கண்டுபிடித்தவர் ஹவுன்ஸ்பீல்டு. இவர் இங்கிலாந்தில் 1919ம் ஆண்டு ஆகஸ்டு 28ந் தேதி பிறந்தார்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, எலெக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்து பட்டம் பெற்றார். அவரது கவனம் எக்ஸ்ரே பக்கம் திரும்பியது. நோயாளி ஒரு இடத்தில் படுத்துக்கொண்டோ, நின்று கொண்டோ இருக்கும்போது தேவைப்பட்ட இடத்தில் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் படங்கள் எல்லாம் நேராகக் காணும் தோற்றத்தில் எடுக்கப்பட்ட படங்கள். அந்தப் படங்களை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்க்கும் விதமாக எடுத்தால், சாதாரண எக்ஸ்ரே படங்களில் கிடைப்பதைவிட அதிகமாக தகவல்கள் கிடைக்கும் என்று அவர் நம்பினார். உடனே அதற்கான தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.
காமா கதிர்களைக் கொண்டு படம் எடுக்க முயற்சித்து, ஸ்கேன் இயந்திரத்தைக் கண்டறிந்தார். ஆனால், அந்த இயந்திரம் மெதுவாக இயங்கியது. ஒரு பொருளை ஸ்கேன் செய்ய ஒன்பது நாட்கள் ஆனது. அதற்குக் காரணம், அந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த உணர்திறன் கொண்ட காமா கதிர்கள். அந்தப் படத்தின் தகவல்களை கம்ப்யூட்டர் மூலம் பெற 2 மணி நேரம் பிடித்தது. ஒரு நோயாளியை 9 நாட்கள் ஸ்கேன் செய்தால் அவர் தாக்குப்பிடிப்பாரா?
இதற்கும் தீர்வு தேடினார் அவர். காமா கதிர்களுக்கு பதிலாக, சக்தி வாய்ந்த எக்ஸ் ரே கதிர் களைப் பயன்படுத்தினார். அதன் மூலம் ஸ்கேன் செய்யும் நேரம் ஒன்பது நாட்களில் இருந்து ஒன்பது மணி நேரமாகக் குறைந்தது. முதலில் பன்றியின் சிறுநீரகப் பகுதிகள் இம்முறையில் படம் எடுக்கப்பட்டன. படிப்படியாக இது மேம்படுத்தப்பட்டு, முதன்முதலாக இந்த ஸ்கேனர் உதவியுடன் 1972ம் ஆண்டு ஒரு பெண்ணின் மூளை படம் எடுக்கப்பட்டது.
அந்தப் பெண்மணியின் மூளையில் வட்ட வடிவத்தில் கருப்பு நிறத்தில் ஒரு புண் தென்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகிற்கு வரப்பிரசாதமானது. 1979ம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி மருத்துவ உலகம் நன்றி தெரிவித்தது.
எலும்பு, மூளை போன்ற உள் உறுப்புகளில் காணப் படும் மாறுபட்ட நிலைகளை அறிய இந்த ஸ்கேன் உதவுகிறது. இரத்தக் குழாய்களின் அடைப்பையும் இதன் உதவியால் கண்டுபிடிக்கலாம். மேலும் காச நோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் எந்த இடத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பதை துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பெரிய அளவில் உதவுகிறது. ஹவுன்ஸ்பீல்டு 2004ம் ஆண்டு ஆகஸ்டு 12ந் தேதி மறைந்தார். அவரது மறைவு உலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு! அவர் மறைந்தாலும் அவருடைய கண்டுபிடிப்பு இன்று பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.