Electric Car Maintenance Tips in Rainy Season 
அறிவியல் / தொழில்நுட்பம்

நீங்க EV கார் வச்சிருக்கீங்களா? போச்சு! மழைக்காலத்தில் ஜாக்கிரதை! 

கிரி கணபதி

மின்சாரக் கார்கள் அவற்றின் சுற்றுச்சூழல் நன்மை மற்றும் குறைந்த செலவு காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில், அவற்றை மழைக்காலத்தில் எப்படி சரியாக பராமரிப்பது என்பதை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். மழைக்காலம் என்பது மின்சாரக் கார்களுக்கு சில சவால்களை ஏற்படுத்தலாம். ஆனால், நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து முறையாக பராமரித்தால் மின்சாரக் கார்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இந்தப் பதிவில் மழைக்காலத்தில் எலக்ட்ரிக் காரை பராமரிக்கத் தேவையான அத்தியாவசிய குறிப்புகள் பற்றி பார்க்கலாம். 

பேட்டரி: பேட்டரிதான் ஒரு மின்சார காரின் இதயமாகும். மழைக்காலத்தில் அதற்கு கூடுதல் கவனம் தேவை. எனவே உங்கள் காரில் பேட்டரி பேக் மற்றும் அதன் இணைப்புகள் முறையாக சீல் செய்யப்பட்டு தண்ணீரிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும். பேட்டரி பெட்டியில் ஈரப்பதம் அல்லது நீர் உள்ளே புகுந்ததற்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். ஏதேனும் கசிவு அல்லது ஈரப்பதத்தைக் கண்டால் உடனடியாக ஒரு தொழில்முறை நிபுணரை தொடர்புகொண்டு அதை சரி செய்யுங்கள். 

சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்யவும்: மழைக்காலங்களில் உங்கள் மின்சாரக் காரின் சார்ஜிங் போர்ட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதன் உள்ளே மழைநீரானது, அழுக்கு மற்றும் குப்பைகளை எடுத்துச் செல்லலாம். எனவே சார்ஜ் செய்வதற்கு முன்பு அதை மென்மையான துணி கொண்டு ஈரம் இல்லாமல் சுத்தம் செய்யவும். 

டயர்கள்: எந்த ஒரு வாகனத்திற்கும் முறையான டயர் பராமரிப்பு முக்கியமானது. மின்சாரக் கார்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஈரமான சாலைகளில் அவற்றின் ஆற்றல் குறைந்து, சறுக்கிக்கொண்டு போகும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் விபத்துக்களைத் தடுக்க உங்கள் டயர்களில் போதுமான திரட் டெப்த் மற்றும் சரியான காற்றழுத்தம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

வெளிப்புறம்: மழைக்காலத்தில் சாலையில் சேறு, சகதி, அழுக்கு என அனைத்துமே இருப்பதால், வாகனத்தின் மீது அவை முழுமையாக படர்ந்துவிடும். இது உங்களது மின்சாரக் காரின் வெளிப்புற வண்ணத்தை சேதப்படுத்தலாம். எனவே வெளிப்புறத்தை முறையாக அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்திருக்கவும். குறிப்பாக வாகனத்தின் அடிப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி சுத்தம் செய்யுங்கள். 

உட்புறம்: ஈரப்பதமானது உங்கள் மின்சாரக் காரின் உட்புறத்தில் ஊடுருவி பூஞ்சை மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களை ஏற்படுத்தும். எனவே காரின் உள்ளே, ஈரத்தை நன்கு உறிஞ்சும்படியான மேட் பயன்படுத்தவும். காருக்குள் ஏதேனும் ஈரப்பதத்தைக் கண்டால் டிஹியூமிடிப்பயரைப் பயன்படுத்தி அவற்றை நீக்கிவிடுங்கள். 

வைப்பர் மற்றும் விளக்குகள்: மழைக்காலத்தில் எலக்ட்ரிக் காரின் முன்விளக்குகள் மிகவும் முக்கியமானவை. அதேநேரம் வின்ஷீல்டு வைப்பர்களையும் பரிசோதித்து அவற்றில் ஏதேனும் பழுது இருந்தால் உடனடியாக மாற்றவும். ஹெட்லைட் மற்றும் இண்டிகேட்டர் லைட் போன்ற அனைத்தும் சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்யவும். 

இவை அனைத்தையும் சரியாக கண்காணித்து முறையாக பராமரித்து வந்தால், மழைக்காலத்தில் உங்களது எலக்ட்ரிக் கார் எவ்விதமான தொந்தரவுகளையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளலாம். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT