புதிய லேப்டாப் வாங்குவது என்பது இப்போதெல்லாம் கடினமான வேலையாக இருக்கிறது. ஏனெனில் எக்கச்சக்கமான பிராண்டுகள் பல புதிய அம்சங்களில் லேப்டாப்களை வெளியிடுகின்றனர். இதில் சரியானதைத் தேர்வு செய்து வாங்குவதே குழப்பமாக உள்ளது. உங்களுக்கு வேலை, கல்வி அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மடிக்கணினி தேவைப்பட்டால், அவை பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொண்டு சரியானதைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இப்பதிவில் புதிய மடிக்கணினி வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
1. நோக்கம் மற்றும் பயன்பாடு: நீங்கள் மடிக்கணினி வாங்க முடிவெடுத்தால் முதலில் என்ன நோக்கத்திற்காக வாங்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும். சாதாரண பயன்பாடு, வேலை நிமித்தம், கேம் விளையாட, கன்டெண்ட் கிரியேஷன் என உங்களது பயன்பாடுகள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்வது மூலமாக, சரியான மடிக்கணியைத் தேர்வு செய்யலாம்.
2. OS: அடுத்ததாக உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு செயல்படும் ஓஎஸ் உள்ளதா என்பதை கவனியுங்கள். Windows, Mac மற்றும் Chrome OS ஆகியவை சந்தையில் இருக்கும் பொதுவான ஓஎஸ் வகைகள். இதில் விண்டோஸ் மிகவும் பிரபலமானது. குரோம் ஓஎஸ் எளிதான மற்றும் இணைய அடிப்படையிலான பணிகளுக்கு சிறந்ததாகும். உங்களிடம் பட்ஜெட் அதிகமாக இருந்தால் மேக் பக்கம் போகலாம்.
3. CPU மற்றும் செயல் திறன்: CPUதான் மடிக்கணினியின் இதயம். அதன் செயல்திறன் சிபியூ பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. இதில் சிறப்பாக இருக்கும் Intel i5, i7 அல்லது AMD Ryzen 5,7 சிபியூ பொருத்தப்பட்ட நவீன மடிக்கணினிகளைத் தேர்வு செய்யுங்கள்.
4. Ram மற்றும் Storage: நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்ய மடிக்கணினி வாங்க போகிறீர்கள் என்றால் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளவற்றைத் தேர்வு செய்வது நல்லது. உங்களது தேவைக்கு ஏற்ப 8GB அல்லது 16GB Ram இருக்கும் சாதனத்தை வாங்குங்கள். அதே நேரம் ஸ்டோரேஜ் என்று வரும்போது பாரம்பரிய ஹார்ட் டிரைவுக்கு பதிலாக, SSD பொருத்தப்பட்ட மடிக்கணினிகள் வாங்குங்கள். இது ஹார்ட் டிரைவுகளை விட வேகமாக செயல்படும்.
5. டிஸ்ப்ளே மற்றும் ரெசல்யூஷன்: உங்களது வசதிக்கேற்ப எத்தனை இன்ச் டிஸ்ப்ளே அளவு கொண்ட லேப்டாப் வாங்க வேண்டும் என்பதை முடிவெடுங்கள். நீங்கள் அடிக்கடி வெளியே கொண்டு செல்வீர்கள் என்றால், சிறிய திரை கொண்ட லேப்டாப் வாங்குவது நல்லது. அதேநேரம் திரையின் ரெசல்யூஷன் அதிகமாக இருக்கும் படி வாங்கினால், அனைத்தும் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். இதுவும் அதன் தன்மைக்கேற்ப விலை மாறுபடும் என்பதால், உங்களுக்கு சரியானதைத் தேர்வு செய்யுங்கள்.
6. பேட்டரி ஆயுள்: நீங்கள் பயணத்தின் போது மடிக்கணினி பயன்படுத்துவீர்கள் என்றால், பேட்டரி ஆயுள் முக்கியமானது. எனவே உங்களது தேவைகளைப் பொறுத்து நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட மடிக்கணினிகளைத் தேடுங்கள். குறைந்தது 8 மணி நேரம் பேட்டரி ஆயுல் இருக்கும்படி வாங்குவது நல்லது. அப்போதுதான் 6 மணி நேரமாவது பேட்டரி நிற்கும். நீங்கள் பயன்படுத்தும் விதம், திரையின் பிரகாசம், பயன்படுத்தும் மென்பொருட்களின் அடிப்படையில் பேட்டரி ஆயுள் மாறுபடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
7. Connectivity மற்றும் Ports: நீங்கள் தேர்ந்தெடுக்கும் மடிக்கணினிகளில் எத்தகைய இணைப்பு விருப்பங்கள் மற்றும் போர்ட்ஸ் இருக்கிறது என்பதை கவனியுங்கள். USB-A, USB-C, HDMI மற்றும் Audio Jack உள்ளிட்ட அனைத்தும் உங்களது தேவைகளுக்கு ஏற்ப இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
8. விலை: நீங்கள் எவ்வளவு பட்ஜெட்டில் மடிக்கணினி வாங்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, அதன் அடிப்படையில் சிறந்த மதிப்பைக் கொண்ட மடிக்கணினியை தேர்வு செய்யவும். விலைக்கேற்ப ஏற்ப மடிக்கணினியின் அம்சங்கள், ஆயுள், தரம், செயல்பாடுகள் மாறுபடலாம். எனவே அதற்கு ஏற்றவாறு உங்கள் பட்ஜெட்டைத் தீர்மானித்து, சரியான லேப்டாப்பை வாங்குங்கள்.
9. தரம்: இறுதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் மடிக்கணினி தரமாக இருக்க வேண்டியது அவசியம். அதிக அம்சங்களை மட்டும் பார்த்து, ஏதோ ஒரு மடிக்கணினியை வாங்கினால், அவை நீண்ட காலத்திற்கு உழைக்காது. எனவே சந்தையில் ஏற்கனவே இருக்கும் நல்ல பிராண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஏற்கனவே வாங்கிய பயணர்களின் ரிவியூவ்களைப் படியுங்கள். வாரண்டி, மடிக்கணினியின் ஆயுள், விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு மடிக்கணியை தேர்வு செய்யுங்கள்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கான சரியான மடிக்கணினியை நீங்கள் தேர்வு செய்யலாம்.