உலகில் இடத்திற்கு இடம் காலநிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதனால் தான் வெயில் காலம், மழைக்காலம், பனிக்காலம் போன்ற இயற்கை மாறுதல்களை நாம் எதிர்கொள்கிறோம். பருவநிலைக்கேற்ப பூமியில் வெப்பநிலை மாறுவது போல, நிலவிலும் வெப்பநிலை மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே பூமியில் நிகழ்ந்த சில மாற்றங்கள் தான். அப்படி என்ன மாற்றம் நடந்தது பூமியில் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் சொல்கிறேன்.
உலகமே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கண்ணிற்குத் தெரியாத ஒற்றை வைரஸைக் கண்டு அஞ்சி நடுங்கியது நினைவில் இருக்கிறதா! நிச்சயம் நினைவில் இருக்கும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய விளைவுகளை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா என்ன! கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உலகமெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டது. இந்த சமயத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கின. இது நிலவிலும் எதிரொலித்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனித செயல்பாடுகள் பூமியில் குறைந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்து விட்டதாம்.
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வேகமெடுத்தது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. கொரோனா வைரஸை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க பல நிறுவனங்கள் இறங்கிய அதே வேளையில், பூமியில் நிலவிய சூழல் காரணமாக நிலவிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஊரடங்கு நேரத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் குறைந்து போனதால், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் தூசுகள் அதிகளவில் குறைந்தது. பூமியின் கதிரியக்க வெளியேற்றத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் தான் 2020 இல் நிலவின் வெப்பநிலை வெகுவாக குறைந்தது என இந்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாசாவுக்குச் சொந்தமான எல்ஆர்ஓ என்ற விண்கலம் நிலவை பல ஆண்டுகளாக சுற்றி, ஆய்வு செய்து வருகிறது. இந்த விண்கலத்திடமிருந்து வந்த தகவல்களை இந்திய விஞ்ஞானிகள் ஆம்பிளி மற்றும் துர்கா பிரசாத் ஆகியோர் ஆராய்ச்சி செய்தனர். அப்போது நிலவின் 6 வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலநிலைகளில் வெப்பநிலை எப்படி இருந்தது என்பதை ஆராய்ந்தனர். அப்போது 2020 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்து, குளிராக இருந்ததை கண்டறிந்தனர். இரவு நேரங்களில் நிலவின் மேற்புறத்தில் சுமார் 8 முதல் 10 கெல்வின் வரை வெப்பநிலை குறைந்து காணப்பட்டுள்ளது. ஊரடங்கில் பூமியின் வளிமண்டலத்தில் குறைந்த அளவில் வெப்பநிலை இருந்ததால், இதன் தாக்கம் நிலவிலும் எதிரொலித்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஊரடங்கு முடிந்த பிறகு, மனித செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கிய சமயத்தில் நிலவின் வெப்பநிலையும் உயர்ந்திருக்கிறது. மனித செயல்பாடுகள் பூமியில் மட்டுமின்றி, மற்ற கோள்கள் மற்றும் விண்ணுலகின் பல பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு கொடுத்துள்ளன. மேலும், பூமியின் காலநிலை மாற்றம், துணைக்கோளான நிலவின் சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கிறது என்பதை இனிவரும் காலங்களில் விரிவாக ஆராய இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.