சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் இஸ்ரோ மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதில் ஒன்றாக அடுத்த செவ்வாய் கிரக பயணத்திற்கான மங்கள்யான் 2 பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மங்கள்யான் 2 திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் அனுப்பப்படும் லேண்டருடன் ட்ரோன் ஹெலிகாப்டரையும் இஸ்ரோ அனுப்பவுள்ளது. இது நாசாவின் Ingenuity ஹெலிகாப்டர் போலவே செயல்படும். நாசா அனுப்பிய Ingenuity ஹெலிகாப்டர் இதுவரை சுமார் 50 முறைக்கு மேல் செவ்வாய் கிரகத்தை சுற்றி, தன் ஆய்வை சமீபத்தில் முடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் ஆர்பிட்டாரை சுற்றி வருவதை இலக்காகக் கொண்டு MOM என்ற விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இது 2014 இல் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்து, இஸ்ரோவின் எதிர்பார்ப்புகளையும் மீறி சிறப்பாக செயல்பட்டு கடந்த 2022 இல் இதன் தொடர்பு இல்லாமல் போனது.
இந்த முறை அனுப்பப்பட உள்ள மங்கள்யான் 2 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரை இறங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே அதில் இருக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி அறிவியல் ஆய்வுகளை நடத்தலாம். ட்ரோன் ஹெலிகாப்டர் மூலமாக செவ்வாய் கிரகத்தில் வான்வழி ஆய்வு நடத்தலாம். இந்த ட்ரோன் ஹெலிகாப்டரில் ஈரப்பத சென்சார், பிரஷர் சென்சார், வெப்பநிலை சென்சார், எலக்ட்ரிக் பீல்ட் சென்சார், வெலாசிட்டி சென்சார், உயிரினங்களைக் கண்டறியும் சென்சார் மற்றும் தூசி சென்சார் ஆகியவை இணைக்கப்பட உள்ளன.
மேலும் இந்த ஹெலிகாப்டர் நாசாவின் ஹெலிகாப்டரை விட அதிக உயரத்தில் பறக்க கூடியதாகும். நாசா ஹெலிகாப்டரால் அதிகபட்சமாக 79 அடி உயரம் வரை மட்டுமே பறக்க முடியும். ஆனால் இந்தியாவின் ட்ரோன் ஹெலிகாப்டர் சுமார் 328 அடி உயரம் வரை பறக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்தியாவின் இந்த ட்ரோன் ஹெலிகாப்டர் திட்டம் நாசாவின் Ingenuity ஹெலிகாப்டர் மூலமாகவே ஈர்க்கப்பட்டுள்ளது. இதே போல சீனாவும் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விமானத்தை அனுப்ப முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர்களது திட்டம் மூலமாக செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளைக் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளார்களாம். எனவே இந்த திட்டங்கள் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரும் என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.