ஆதித்யா-எல் 1-னில் உள்ள 7 கருவிகளின் 2வது கருவி செயல்பட தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் விண்வெளியில் உள்ள புரோட்டான், அல்பா துகள்களில் மாறுபாடு கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் 125 நாட்கள் பயணித்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் லெக்ராஞ்சியன் புள்ளி 1 சென்றடையும். அந்த இடத்திலிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியை ஆதித்யா தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் ஜனவரி 7ஆம் தேதி ஆதித்யா குறிப்பிட்ட பகுதியை அடைய உள்ளது. அந்த குறிப்பிட்ட பகுதியில் தான் சூரியனுக்கும் பூமிக்குமான ஈர்ப்பு விசை சமமானதாக இருக்கிறது. இதனால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டு அதை நோக்கி ஆதித்யா தனது பயணத்தை தொடங்கியது.
இந்த நிலையில் ஆதித்யா-எல் 1-னில் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய 7 கருவிகளில் 2வது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் செயல்பட தொடங்கி இருக்கிறது. இது சூரிய காற்றுதுகள் கருவியை செயல்படுத்தி விண்வெளியில் உள்ள புரோட்டான் மற்றும் ஆல்பா துகள்களின் மாறுபாட்டை கண்டுபிடித்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரோ மீட்டர் புரோட்டான், அல்பா துகள்களில் உள்ள மாறுபாட்டை ஹின்டோகிராம் வழியாக விளக்குகிறது. இதன் மூலம் சூரியகாற்று, சூரியபுயல் ஆகியவற்றின் உள்ள கூறுகளை தெரிந்து கொள்ள முடியும். இத்தரவுகள் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியில் முக்கிய அங்கமாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.