உலக அரங்கில் குறைந்த செலவிலேயே செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி இஸ்ரோ சாதனை புரிந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ ஸ்பேஸ் X நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரோவின் உதவியை உலக நாடுகள் நாடி வந்த நிலையில், நம்முடைய செயற்கைக்கோளை அனுப்புவதற்கு நம்மிடமே ராக்கெட் இல்லை என்ற தகவல் வெளியே தெரிய வந்தால், உலக நாடுகள் எப்படி பழித்து பேசுமோ தெரியவில்லை. இஸ்ரோவின் திறமை சந்திரயான் 3 திட்டத்தின் மூலமாக உலகிற்குத் தெரிந்தது. இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தால் பலரும் நம் இந்தியர்களின் திறமையை பாராட்டினர்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே இஸ்ரோவின் முதல் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு புத்தாண்டை சிறப்பாகத் தொடங்கியது. இந்நிலையில் Space X நிறுவனத்தின் ராக்கெட் மூலமாக இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் செலுத்தப்படவுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
நம்மிடம் தலைசிறந்த ராக்கெட்டுகள் இருக்கும்போது ஏன் SpaceX ராக்கெட்டை நாம் நாட வேண்டும்?
இதற்கான பதில், இந்தியாவிடம் அதிக எடையை தூக்கிச் செல்லும் அளவிலான ராக்கெட் இல்லை என்பதுதான். அதாவது விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்தியாவின் புதிய செயற்கைக்கோளின் எடை 4700 கிலோ. இஸ்ரோவின் ராக்கெட்டுகளால் அதிகபட்சமாக 4000 எடை கொண்ட விண்கலத்தை மட்டுமே சுமந்து செல்ல முடியும். எனவே இஸ்ரோ தயாரித்துள்ள விண்கலத்தின் எடை கூடுதலாக 700 கிலோ இருப்பதால் இஸ்ரோவின் ராக்கெட் மூலமாக அதை விண்ணில் செலுத்த முடியாது. அதற்காகத்தான் ஸ்பேஸ் x நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் பயன்படுத்தி விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளனர். Falcon 9 ராக்கெட்டால் அதிகபட்சமாக 22,000 கிலோ எடை வரை சுமந்து கொண்டு விண்ணிற்கு செல்ல முடியும்.
இந்த ராக்கெட் எப்போது விண்ணில் செலுத்தப்படும் என்ற சரியான தேதி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் 2024 ஆம் இரண்டாம் பாதியில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இஸ்ரோவுடனான கூட்டணி நிச்சயம் எலான் மஸ்கிற்கு சாதகமான விளைவுகளைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் தன் நிறுவனம் சார்ந்த முதலீடுகளை அவர் தொடங்கியுள்ளார்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்த கூட்டு முயற்சியால் அவருக்கு அதிக லாபம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.