ஆய்வு பணிகளுக்காக விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சில சமயங்களில் தங்களின் விண்கலத்தை விட்டு வெளியே வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது விண்வெளி நடைபயணம் என அழைக்கப்படுகிறது. முறையாக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் கவச உடைகளை அணிந்து கொண்டு விண்வெளி நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.
1965-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 12 நாடுகளை சேர்ந்த 263 விண்வெளி வீரர்கள் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்துமே ஆய்வு நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட விண்வெளி நடைபயணம் ஆகும்.
இந்த நிலையில் வணிக ரீதியில் தொழில்முறை விண்வெளி வீரர் அல்லாத தனிநபர்களை விண்வெளி நடைபயணம் மேற்கொள்ள வைப்பதற்கான முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இறங்கியது. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான 'ஜாரெட் ஐசக்மேன்', (10-9-24) அன்று 'டிராகன் விண்கலம்' மூலம் விண்வெளி நடைபயணத்தை மேற்கொண்டார். 15 நிமிடம் அவர் விண்வெளியில் நடைபயணம் செய்தார். அதன் பின்னர் அவர் விண்கலத்துக்கு திரும்பினார். இந்த முயற்சி ஆபத்தானதாக கருதப்பட்டாலும், இரண்டு மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
உலகில் இந்த முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1961ம் ஆண்டு தான். உலக வரலாற்றில் ஏப்ரல் 12, 1961ம் ஆண்டிற்கு முக்கிய இடமுண்டு. ஆம், அன்று தான் விண்வெளிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் மனிதர் ஒருவர் பயணித்தார். அவர் தான் 1934ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி சோவியத் ரஷ்யாவின் குளூசினே நகரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த 'யூரி அலெக்சியேவிச் ககாரின்'. அன்று அவர் விண்வெளியில் இருந்தது 108 நிமிடங்கள் அதில் அவர் தான் பயணித்த விண்கலத்தில் பூமியையும் ஒரு முறை வலம் வந்தார். உலகில் பூமியை வலம் வந்த முதல் மனிதரும் அவர் தான்.
யூரி ககாரின் விண்வெளி சென்று திரும்பிய அந்த நாளான ஏப்ரல் 12ம் தேதியை ரஷ்ய அரசு 'உலக விண்வெளி வீரர்கள் தினமாக' அறிவித்து அதை விடுமுறை தினமாகவும் அறிவித்தது.
யூரி ககாரின் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி, அதன் பிறகு விமானம் ஒட்டி பயிற்சி பெற்ற பிறகு ராணுவ பைலட் ஆனார். ரஷ்ய ராணுவத்தில் பல விமானிகள் இருந்தாலும். ககாரினின் துடிப்பு மிக்க செயல்பாடுகளும், எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து செயல்படும் தன்மை, நுண்ணிய கணித ஆற்றல் மற்றும் உடற்தகுதி காரணமாக அவரை முதல் முறையாக விண்வெளி செல்ல தேர்வு செய்து பயிற்சி கொடுத்து விண்வெளி அனுப்பியது சோவியத் ரஷ்ய அரசு.
தற்போது பலதொழில் நுட்ப முன்னேற்றங்கள் வந்து விட்டது. பல பாதுகாப்பு வசதிகளுடன் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறாரகள். ஆனால், ககாரின் பயணித்த வோஸ்டாக்-1 விண்கலம் சோதனை ஓட்டத்தில் பல்வேறு தோல்விகளை சந்தித்த விண்கலம். அந்த விண்கலத்தில் பிரச்சினை ஏதாவது ஏற்பட்டால் அவரது உயிரை காப்பாற்ற கூடிய எந்த அவசர மீட்பு அமைப்பும் இல்லை. இருந்தாலும் ககாரின் துணிச்சலாக அந்த விண்கலத்தில் விண்வெளி சென்று வெற்றிகரமாக பூமியை வலம் வந்தார்.
ககாரின் விண்வெளி சென்று திரும்பி பூமிக்கு வரும் போது சரியான நேரத்தில் அவரது விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரியவில்லை, அந்த நேரத்தில் சமயோசிதமாக சிந்தித்து திட்டமிட்டு பாராசூட் மூலம் வோல்கா நதியின் கரையில் இறங்கினார். பூமிக்கு திரும்பிய யூரி ககாரின் ஹீரோவாக பார்க்க பட்டார். உலகின் பல்வேறு பத்திரிகைகள் அவரின் புகைப்படத்தை, அவரின் சுய குறிப்புடன் வெளியிட்டு பெருமைப்படுத்தியது. அப்போது யூரி ககாரின் வயது 27 தான்.
இரண்டாம் உலகப்போர் வெற்றி விழாவிற்கு பிறகு ரஷ்யா கொண்டாடிய மிகப்பெரிய விழா யூரி ககாரின் விண்வெளி சென்று திரும்பிய நாள் தான். 'ஹீரோ ஆப் ரஷ்யா' எனும் விருதை கிரெம்ளின் மாளிகைக்கு அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு அப்போதைய ரஷ்யா அதிபர் குரு சேவ் மூலம் யூரி ககாரினுக்கு வழங்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் ககாரின் உருவப்படம் தபால் தலைகளிலும், கவர்களிலும் வெளியிடப்பட்டது. சில நாடுகள் ககாரின் உருவத்தை அந்நாட்டின் நாணயங்களில் பொறித்து வெளியிட்டது.
'விண்வெளி பயணங்கள் மனித குலத்தின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்பட வேண்டும்' என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்த யூரி ககாரின் 1968 மார்ச் 27 அன்று ராணுவ மிக்15 ரக போர் விமானம் ஒன்றை பரிசோதித்து பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். அப்போது அவரின் வயது 34.