Mars 
அறிவியல் / தொழில்நுட்பம்

செவ்வாய் கோளில் திரவ நீர்த்தேக்கம்! யம்மாடியோவ், இத்தனை பெரிசா ?

ரா.வ.பாலகிருஷ்ணன்

விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ள கோள்களில் செவ்வாய் கோளும் ஒன்று. தற்போது செவ்வாயில் ஒரு திரவ நீர்த்தேக்கம் இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இப்போது காண்போம்.

விண்வெளியில் எத்தனை விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டாலும் இது போதாது என்பது தான் விஞ்ஞானிகளின் எண்ணம். அதற்கேற்ப சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், செவ்வாய், பூமி மற்றும் நிலா என பல கோள்களில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் புதிய தகவல்களை ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் கூட புதன் கோளில் வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செவ்வாய் கோளில் திரவ நீர்த் தேக்கம் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தின் நான்காவது கோள் செவ்வாய். புதனுக்கு அடுத்து இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. இதன் மேற்புறத்தில் இருக்கும் இரும்பு ஆக்சைடு தான், இதன் செந்நிறத்திறகு காரணமாகும். பூமியில் இருப்பதைப் போன்று பாலைவனங்கள், எரிமலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் செவ்வாயிலும் உள்ளன. இந்நிலையில் இதில் திரவ நீர்த் தேக்கமும் இருக்கிறது என்ற கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கோளில் தண்ணீர் உறைந்து கட்டியாக இருக்கும் மேற்பரப்பைப் போல் அல்லாமல், திரவ நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு இங்கு வெப்பநிலை நிலவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாயில் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சியில் இங்கு நீர்நிலைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்நிலையில், நாசாவுக்குச் சொந்தமான இன்சைட் லேண்டரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இங்கு திரவ நீர்த் தேக்கம் இருப்பது உறுதியாகி இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் செவ்வாயின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்டது தான் இந்த இன்சைட் லேண்டர்.

செவ்வாயின் மேற்பரப்புக்கு அடிப்பகுதியில் திரவ நிலையில் இருக்கும் ஒரு பெரிய நீர்த் தேக்கம் மறைந்திருக்கிறது. இந்தத் நீர்த் தேக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று சொன்னால் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில், உலகளாவிய ஒரு கடலில் ஒரு முழு கிரகத்தையே உள்ளடக்கும் அளவிற்கு பெரியதாக இந்த நீர்த் தேக்கம் இருக்கிறது என்ற தகவல், நாசாவின் மூலம் தெரிய வந்துள்ளது.

செவ்வாய் கோளின் மேற்பரப்பில் இருந்து சுமார் 7.2 முதல் 12.4 மைல்கள் (அதாவது 11.5 முதல் 20 கி.மீ.) வரை திரவ நீர்த் தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருக்கும் தண்ணீர் உடைந்த பாறை இடுக்குகளுக்கு இடையில் தேங்கியுள்ளது. இங்கு தான் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான வெப்பநிலை நிலவுகிறது. இந்தத் தகவலின் மூலம் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் செவ்வாயில் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. செவ்வாய் கோள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு வருங்காலத்தில் உதவியாக இருக்கும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT