தலை சிறந்த டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் AI தொழிற்ப வளர்ச்சிக்காக அணுசக்தி விஞ்ஞானிகளை பணியமத்தி வருகிறது. இந்நிறுவனம் ChatGPT போன்ற AI மாதிரிகளை இயக்குவதற்காக அணுசக்தியைப் பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக அணுசக்தி விஞ்ஞானிகளை பணியமர்த்தும் வேலையில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மிகப்பெரிய அணு உலைகளுக்கு பதிலாக சிறிய அணு உலைகளை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி AI மாடல்களை உருவாக்கலாம் என்பதுதான் இந்நிறுவனத்தின் திட்டமாகும். இதனால் AI மாடல்களை இயக்குவதற்கான செலவு வெகுவாக குறைக்கப்படும் என நம்பப்படுகிறது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் AI தொழில்நுட்பத்தில், அதன் AI மாதிரிகள் செயல்பட அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ChatGPT- ன் சர்வர்கள் ஒரு நாளைக்கு செயல்படுவதற்கு 7 லட்சம் டாலர்கள் வரை செலவாகிறது. மேலும் AI தொழில்நுட்பம் காரணமாக அதிகப்படியாக கணினிகள் இயங்குவதால் 550 டன்னுக்கும் மேல் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படலாம். இதற்காக 3.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கார்பன் உமிழ்வை குறைக்கும் விதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி தரவு மைய செயல்பாடுகளை இயக்குவதற்கு மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே அணு சக்தியை பயன்படுத்த மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.
நாம் அனைவருமே AI தொழில்நுட்பத்தால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது, இனி எதிர்காலத்தில் மேலும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும் என எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், இதனால் அதிகப்படியான மின்சாரப் பயன்பாடு ஏற்படப் போகிறது என்பது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. மின்சாரப் பயன்பாடு அதிகரித்தால், அதனால் அதிகப்படியான கார்பன் வெளியேறி, உலக வெப்பத்தை அதிகரிக்கலாம். அத்துடன் அதிகப்படியான மின்சாரப் பயன்பட்டால், மக்களுடைய மின்சார தேவை பாதிப்படைய வாய்ப்புள்ளது.
எனவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பாதிப்பாக மின்சாரப் பயன்பாட்டைக் கூறலாம். இதை மாற்றும் விதமாகத்தான் மைக்ரோசாப்ட் தற்போது அணுசக்தியில் ஆர்வம் காட்டி வருகிறது.