தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எந்தெந்தத் துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதைப் பார்ப்போம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பல சவால்களை முன்வைக்கிறது. காலை காபி குடிப்பதில் இருந்து இரவு உறங்கும் வரை எங்கே தான் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லுங்கள்? சமையலுக்கு மின் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், துணி துவைக்க வாஷிங் மெஷின் இன்னும் பல உபகரணங்கள் நம் வேலையை எளிதாக்க உருவாக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கம் ஆகும்.
உள்ளங்கை அளவில் இருக்கும் மொபைல் உலகின் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. நம் அனைவரின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத அம்சமாக மொபைல் போன் மாறிவிட்டது தொழில்நுட்ப வளர்ச்சிதானே?
விவசாயத் துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்ப்பாசன முறைகள் அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாகவே சாத்தியமாகிறது.
அடுத்து மருத்துவம். மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமானது. நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி அல்லாமல் என்ன?
போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், பழங்காலத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பிறகு சைக்கிள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்று நம் நாடு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துதான் வருகிறது. கடல் மார்க்கம், ஆகாய மார்க்கம் என்று பிரயாணம் செய்யும் அளவிற்கு போக்குவரத்து சாதனங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம்தான். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வேலைகளை இலகுவாக செய்ய முடிகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக இந்தியா வளர்ந்து கொண்டு வருகிறது. இந்தியா இப்போது உலகின் மூன்றாவது ஸ்டார்ட் அப் இடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கலின் எழுச்சியுடன் இந்திய அரசாங்கம் தொழில்நுட்பத் துறையில் தனது கவனத்தை அதிகரித்துள்ளது.
உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், எளிதாக வணிகம் செய்யவும், தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி இருந்தால்தான் சாத்தியம் ஆகும். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் இன்றியமையாத ஒன்றாகும்.
தகவல் தொழில்நுட்பம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பங்களிப்பு தருவது மட்டுமன்றி நிர்வாகத்தை மிகவும் திறமையாக அணுகக் கூடியதாகவும் மாற்றம் செய்துள்ளது.
எல்லாவித தகவல்களுக்கான அணுகலை எளிதாக்கி உள்ளது. நமது பொருளாதாரம் அதிவேகமாக முன்னேறவும், மில்லியன் கணக்கில் வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி துறை முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி நம் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும்.
5ஜி, தகவல் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா அனலடிக்ஸ் ஆகியவற்றின் வளர்ச்சி இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.