OpenAI நிறுவனத்தின் ChatGPT அறிமுகத்திற்கு பிறகு உலகம் முழுவதும் AI கருவிகள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் டைம்ஸ் பத்திரிகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் AI கருவிகளும் இடம் பெற்றுள்ளது. அதில் சில சிறந்த AI கருவிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
OpenAI GPT-4: மக்கள் அனைவருமே விரும்பத்தக்க வகையில் மிகவும் சக்தி வாய்ந்த AI கருவியாக GPT-4 உருவெடுத்துள்ளது. நாம் என்ன கேள்வி கேட்டாலும் அதில் உள்ள சிக்கலான விஷயங்களை எளிய மொழியில் இதனால் விளக்க முடியும். கடந்த செப்டம்பரில் இதில் குரல் மற்றும் படங்களை உள்ளிட்டு பயனர்கள் அதற்கான பதிலைப் பெரும்படியான புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடக்கத்தில் வெளியான ChatGPTஐ சிறந்து விளங்குகிறது.
Runway General-2: இந்த AI கருவி கூகுள் ஆதரவு ஸ்டார்ட் அப் நிறுவனமான ரன்வேயால் உருவாக்கப்பட்ட AI வீடியோ மென்பொருளாகும். குறிப்பாக இந்த நிறுவனம் உருவாக்கிய விஷுவல் எபெக்ட் கருவிகள், ஆஸ்கார் விருதுகளை அள்ளிகுவித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான "எவரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" படத்தில் பயன்படுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. நாம் என்ன உள்ளீடு செய்கிறோமோ அதற்கு ஏற்றவாறு சிறப்பான வீடியோக்களை உருவாக்கும் கருவிதான் இது.
Firefly Photo Editing: இந்த அம்சம் போட்டோ எடிட்டிங் துறையில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே Adobe அதன் AI இமேஜ் ஜெனரேட்டருக்கு போட்டோ ஷாப்பை வழங்கியது. இதை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய போட்டோக்களை எளிதாகவும் விரைவாகவும் எடிட் செய்து கொள்ளலாம்.
AI Pin: ஆப்பிளின் முன்னாள் நிர்வாகிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனமான Humane-ன் தயாரிப்புதான் இந்த AI Pin. இந்த சாதனத்தை ஒருவர் எளிதாக தங்களின் ஆடையில் பொருத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய தகவல்கள், தினசரி திட்ட அழைப்புகளை நேரடியாக இந்த சாதனத்திற்கு அனுப்ப முடியும். இது எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களை ஓரம் தள்ளிவிட்டு அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வித்தியாசமான சாதனமாகும். இந்த சாதனத்திட்டமே சிக்கலான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை நாம் பெற முடியும்.
OpenAI Dall-E 3: Dall-E 3 என்பது நாம் கொடுக்கும் உள்ளீடுகளைப் பயன்படுத்தி படங்களை உருவாக்கும் AI கருவியாகும். தொடக்கத்தில் சாதாரணமாக இருந்த இந்த கருவி, அடுத்தடுத்து மேம்படுத்தல்களில் தற்போது சிறப்பான மாடலாக உருவாகியுள்ளது. OpenAI நிறுவனத்தின் சிறந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று.
இந்த ஐந்து கருவிகளும் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. இதனாலையே டைம் பத்திரிகையில் தலைசிறந்த கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன.