இன்றுமுதல் நாளைவரை:
சற்றே பெரிய பெட்டி அளவில் இருந்த தொலைபேசிக் கருவி இப்போது கையடக்கமாக, சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு போகக்கூடிய அளவுக்குச் சுருங்கிவிட்டது.
அதேபோல வீட்டில் பாதி சுவரை மறைக்கும் பெரிய திரை கொண்ட டெலிவிஷன் கருவியும் கையடக்கமாக மாறிவரும் அதிசயம் உங்களுக்குத் தெரியுமா?
ஆமாம், உருளை வடிவிலான சிறு பெட்டிதான் அது. அதுவே ரிமோட் கன்ட்ரோல். அதுசரி, திரை? நாம் தேர்ந்தெடுப்பதுதான் திரை. ஆமாம், இந்த உருளைக் கருவியை இயக்கினோமானால் அதிலிருந்து பாயும் ஒளி, நீங்கள் காட்டும் சுவரில், தரையில், ஏன் விதானத்தில்கூட காட்சிகளைக் காட்டும்! எந்த சானல் நிகழ்ச்சியையும் நீங்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டோ, சோபாவில் சாய்ந்து கொண்டோ, படுக்கையில் படுத்துக் கொண்டோ கண்டு களிக்கலாம். உங்கள் வீடு என்றில்லை, நீங்கள் எங்கே போனாலும் அங்கே இந்தக் கருவியைக் கொண்டுபோய் அங்குள்ள சுவரைத் திரையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
பிரமிப்பாக இருக்கிறதா? இருக்கட்டும், இந்த தொலைக்காட்சிப் பெட்டியின் பூர்வீகத்தை ஆராய்வோமா?
நேற்று முதல் இன்றுவரை:
தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து முதன் முதலாகக் கோபப்பட்ட நபர் யார் தெரியுமா? சர்வாதிகாரி ஹிட்லர்தான்! ஆமாம், 1936ம் ஆண்டு, நவம்பர் 2ம் நாள், லண்டன் பிபிஸி நிறுவனம் ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சியில் அவரை விமரிசித்திருந்தார்கள். அதைப் பார்த்துதான் கொதித்துப் போனார் அவர்.
ஆனால் அதற்கும் ஓராண்டுக்கு முன்னால் 1935, மார்ச் 22 அன்றே ஜெர்மனி, பெர்லின் நகரில் உலகின் முதல் தொலைக்காட்சி பொது ஒளிபரப்பு தொடங்கப்பட்டு விட்டது.
அடுத்து, தொலைக்காட்சியின் கண்டுபிடிப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் தீவிர முயற்சிகளும், பற்பல ஆராய்ச்சிகளும் மெற்கொள்ளப்பட்டன. பல விஞ்ஞானிகள், தனியாகவும், கூட்டாவும் பலப்பல ஆண்டுகள் உழைத்து, கண்டு பிடித்து மேம்படுத்தப்பட்ட ஒரு சாதனம் என்பதால் அதைக் கண்டுபிடித்ததாகிய பெருமை எந்த ஒரு தனி மனிதருக்கும் இல்லை.
ஒலி அலைகள் மூலம் உலகெங்கும் மக்கள் பேச்சுகளைக் கேட்கவும், இசையை அனுபவிக்கவும் வானொலி பெட்டி வழிவகுத்தாலும், உருவமாகப் பார்க்கும் பொதுஜன ஆர்வம்தான் தொலைக்காட்சிப் பெட்டி உருவாக முக்கியக் காரணம்.
1880களில் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல், தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற கண்டுபிடிப்பாளர்கள் ஒலியையும், உருவங்களையும் பரப்பும் தொலைபேசிக் கருவி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.
1884ம் ஆண்டு பால் நிப்கோவ் என்ற ஜெர்மானியர் கம்பிகள் மூலமாக உருவங்களை அனுப்பும் ‘சுழல் தட்டு‘த் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதற்கான உரிமையையும் பெற்றார். அடுத்து இயந்திரத் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு தொழில் நுட்பம் ஆகிய முறைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 1907ம் ஆண்டு முதல் மின்னணு தொழில் நுட்பம், தொலைக்காட்சியை சிக்கெனப் பற்றிக் கொண்டது.
1925ம் ஆண்டு லண்டன் நகரில் நிழற்பட உருவங்களின் அசைவுகள் தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டப்பட்டன; 1927ல் டாலர் சின்னம் ஒளிபரப்பாகியது; 1929ல் நவீனமாக்கப்பட்ட டியூப் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிரூபணமாயிற்று.
ஆனால் தொலைக்காட்சியை பொதுஜனப் புழக்கத்துக்குக் கொண்டு வந்தது ஜெர்மனிதான். 1936ம் ஆண்டு பெரிலின் ஒலிம்பிக் போட்டி விளையாட்டுகளை பெர்லின் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்ப, அதை அந்நகர மக்கள் பேரதிசயத்துடன் கண்டு களித்தார்கள். விளையாட்டு அரங்கைத் தேடி நாம் போகாமல், அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நம்மைத் தேடி வருகின்றனவே என்ற பிரமிப்பில் மூழ்கினார்கள் அவர்கள்!
அடுத்தடுத்து தொலைக்காட்சி பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. 1936ல் இல் கல்மன் திஹன்யி என்ற விஞ்ஞானி பிளாஸ்மா தொலைக்காட்சி என்ற தட்டை (Flat) வடிவ திரை நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். பிறகு 1940ல் வண்ணத் தொலைக்காட்சியும், ரிமோட் கன்ட்ரோலும் கண்டு பிடிக்கப்பட்டன.
அடுத்த பாய்ச்சல்தான், கேபிள் தொலைக்காட்சி. பல ஒளிபரப்பு நிறுவனங்கள், பல நிகழ்ச்சிகளை உலகோர் அனைவரையும் மகிழ்விக்கின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்த சம்பவமும் அப்படியே தத்ரூபமாகக் காட்டப்படுகிறது.
ஆனால் தொலைக்காட்சிப் பெட்டியை முட்டள் பெட்டி அதாவது ‘இடியட் பாக்ஸ்’ என்று அப்போது மட்டுமல்லாமல் இப்போதும் வர்ணிக்கிறார்கள். ஆமாம், நேயரின் சிந்தனைக்கு, அவருடைய கற்பனைத் திறன் மற்றும் மூல அறிவுக்கு வாய்ப்பே அளிக்காமல், தொலைக்காட்சிப் பெட்டி, தன்னை ‘தேமே‘ னென்று பார்க்கச் சொல்கிறதே, அதனால்தான் அதற்கு அந்தப் பட்டப் பெயர்!