TN Alert App 
அறிவியல் / தொழில்நுட்பம்

'TN Alert' செயலி கண்டிப்பா உங்க போன்ல இருக்கனும்! ஏன் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

இயற்கைப் பேரிடர் குறித்த தகவல்கள் அனைத்தும் முன்கூட்டியே மக்களைச் சென்றடைய வேண்டும் என தமிழ்நாடு அரசு உருவாக்கியது தான் TN Alert செயலி. இந்தச் செயலி பொதுமக்களுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

தொழில்நுட்ப வளர்ச்சியினால் இருந்த இடத்திலேயே அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளும் வசதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவங்களைக் கூட உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் இன்று காலநிலையையும் அறிந்து கொள்ளும் வசதி விரல் நுனிக்கே வந்துவிட்டது எனலாம். மழை, வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் காலங்களில் அவற்றை அறிந்து கொள்ள செய்திகள் தான் நமக்கு பிரதான ஆதாரமாக இருக்கின்றன. இந்நிலையில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவுகிறது TN Alert என்ற மொபைல் செயலி.

வானிலை நிலவரம்:

TN Alert செயலியின் மூலம் வரவிருக்கும் இயற்கைச் சீற்றங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்திய இயற்கைச் சீற்றங்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். அனைத்து வானிலை தகவல்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி வழங்குவதால், பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும். தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து, அங்கு தற்போதைய மழை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை இந்தச் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுக்க அடுத்த நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு, வெள்ளம், குளிர், ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் ரெட் அலர்ட் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சீரான இடைவெளியில் அவ்வப்போது இந்தச் செயலியில் அப்டேட் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேதி வாரியாக பதிவான மழையின் அளவு எவ்வளவு என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். மழைமானி அமைந்திருக்கும் இடங்களில் எவ்வளவு மழை பதிவாகியுள்ளது என்ற தகவல்கள் டிஎன் அலர்ட் செயலியில் தினந்தோறும் அபடேட் செய்யப்படுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

நிலநடுக்கம், சூறாவளி, புயல் பாதிப்பு மற்றும் தீ விபத்து போன்ற பாதிப்புகளின் போது நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் இந்தச் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மழை மற்றும் புயல் பாதிப்புகளின் போது ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், நீங்கள் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் மாவட்ட மற்றும் மாநில கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண்களை அழைக்கலாம்.

எச்சரிக்கை மணி:

டிஎன் அலர்ட் செயலியில் ஜிபிஎஸ் இணைக்கப்பட்டு இருப்பதால், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், அலாரத்துடன் எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த எச்சரிக்கையின் மூலம் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், TN Alert செயலி உங்கள் மொபைல்போனில் இருப்பது மிகவும் அவசியமாகும்.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT