ZOHO நிறுவனம் சமீபத்தில் அதன் சொந்த வெப் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது. இந்த வெப் பிரவுசருக்கு தூய தமிழில் 'உலா' என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ZOHO என்றதும் முதலில் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது ஸ்ரீதர் வேம்புதான். அதுவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் அவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வரும் காட்சி பலருக்கும் தெரிந் திருக்கும். அந்த அளவுக்கு ZOHO நிறுவனமானது ஒரு தமிழருடையது என்பது அனைவருமே அறிந்தத ஒன்று. தற்போது அந்நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'உலா' என்ற வெப் பிரவுசர் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழில் உலாவி என்றால் பிரௌசர் என்று அர்த்தம். அதை சுருக்கி 'உலா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் குரோம், ஆப்பிள் சபாரி போன்ற பிரவுசர்கள் போல் இல்லாமல், இந்த உலா, வெப் பிரவுசரானது அதன் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் சில, பயனர்களின் தரவை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இதுபோன்ற செயல்களை உலா வெப் பிரவுசர் ஒருபோதும் செய்யாது என அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தனியுரிமையை மையமாகக் கொண்ட பிரவுசராக, இந்த உலா வெப் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதற்காகவே பிளாக் ட்ராக்கிங் மற்றும் இணையதள கண்காணிப்பு போன்ற பல திறன்களை இது கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல சாதனங்களில் எந்த தடையும் இல்லாமல் பயன்படுத்தவும் இது அனுமதிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி ஜோகோவின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், "உலா பிரவுசரைப் பயன்படுத்த பயனர்கள் தங்களின் தனியுரிமையை சமரசம் செய்ய வேண்டியதில்லை. இத்தகைய செயலானது மற்ற பிரவுசர்களில் கண்காணிப்புக்கு பயன்படுத்துவதை நாங்கள் உணர்கிறோம். தனியுரிமையை மையமாகக் கொண்டு, பாதுகாப்பு சேவையை உலா எப்போதும் வழங்கும். இதில் ஒருபோதும் Cache சேமிக்க முடியாது. பயனர்களின் எந்த செயல்பாட்டையும் யாராலும் கண்காணிக்க முடியாது. அங்கீகரிக்கப்படாத புஷ் அறிவிப்புகள் பாப் அப் மெசேஜ்கள் மற்றும் நேரத்தை கண்காணிக்கும் அம்சங்கள் போன்ற அனைத்தையும் இந்த வெப்சைட் தடை செய்கிறது" என தெரிவித்துள்ளார்.
இத்தகைய பல அம்சங்கள் கொண்ட உலா பிரவுசர், இப்போது குரோம் வெப் ஸ்டோரிலேலையே நேரடியாக கிடைக்கிறது என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.