மனிதர்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கும் விஷயங்கள்தான் அறிவியலாக உள்ளது. ஆனால் இத்தகைய அறிவியலையும் தாண்டி மனிதர்களால் அறியப்படாத பல விஷயங்கள் அதிசயமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட விஷயங்கள் பற்றிய அனைத்துமே மர்மங்கள் நிறைந்ததாக இருக்கும். அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாராலும் சரியாகக் கூற முடியாது. அப்படி இந்த பூமியைத் தாண்டி விண்வெளியில் அதிசயமாக இருக்கும் ஒன்றுதான் கருந்துளை. கருந்துளை உள்ளே ஒருவர் நுழைந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி தெரியுமா?
நீங்கள் இதுவரை கருந்துளையை பார்த்ததில்லை என்றால், உடனடியாக 'Interstellar' திரைப்படம் போய் பாருங்கள். கருந்துளையின் தத்ரூபமான வடிவத்தை அதில் காட்டி இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அதன் உள்ளே சென்றால் என்ன நடக்கும் என்பதையும் விவரித்திருப்பார்கள். தற்போது நமது பூமியிலிருந்து கருந்துளைகளை காண்பதற்காக விண்வெளி தொலைநோக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலமாக கருந்துளைக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை நாம் பார்க்கலாம். விஞ்ஞானிகளின் அனுமானப்படி கருந்துளை சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கலாம். அணு அளவுக்கு மிகச்சிறிய கருந்துளையும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவை சிறியதாக இருந்தாலும் மிகப்பெரிய மலையின் எடை கொண்டது என்கின்றனர்.
விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கருந்துளைகள் இருக்கிறது. இதில் மிகப்பெரிய கருந்துளையை 'சூப்பர் மாசிவ்' கருந்துளை என அழைக்கின்றனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான சூரியன்கள் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்குப் பெரியது இந்தக் கருந்துளை. பொதுவாகவே கருந்துளையை நாம் அவ்வளவு எளிதில் காண முடியாது. ஏனென்றால் அதன் வலுவான ஈர்ப்பு தன்மை ஒளியைக் கூட கருந்துளையின் உள்ளே இழுக்கிறது. அதிக ஆற்றல் கொண்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இத்தகைய கருந்துளைகளைப் பார்க்கின்றனர்.
இதன் உள்ளே ஒருவர் நுழைந்து வெளிவந்தால், சிறிது நேரத்தில் அவர்களது வாழ்வில் பல ஆண்டுகள் கழிந்திருக்கும் என்கின்றனர். கருந்துளையில் நாம் செலவிடும் நேரம் நிமிடமாக இருக்கும்போது, அது நமது பூமியில் பல ஆண்டுகளுக்கு சமமாகும்.
அப்படிதான் Interstellar திரைப்படத்திலும், கருந்துளையில் பயணித்த கதாநாயகன் மீண்டும் வரும்போது இளமையாகவே இருப்பார். ஆனால் அவருடைய மகள் 90 வயதைக் கடந்து முதுமை அடைந்திருப்பார்.
ஆனால் அவ்வளவு எளிதில் கருந்துளையில் யாராலும் பயணிக்க முடியாது. அதன் ஈர்ப்பு விசையால் கருந்துளையின் அருகே சென்றதும், நீங்கள் துகள்களாக மாறி விடுவீர்கள்.