சர்வதேச விண்வேளி மையத்திற்கு ஆராய்ச்சிக்காகச் சென்ற இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் புட்ச் வில்மோர் இன்னமும் பூமிக்குத் திரும்பவில்லை. இவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அடுத்த ஆண்டு வரை இவர்கள் விண்வெளியில் தான் இருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
பூமியில் இருந்து ஏறத்தாழ 400கி.மீ. தொலைவில் சர்வதேச விண்வெளி மையம் அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள் இங்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இதற்காக விமானங்கள் தயாரிப்பில் முன் அனுபவம் பெற்றிருக்கும் போயிங் நிறுவனத்தை நாசா பயன்படுத்திக் கொண்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் எனப்படும் ஸ்பேஸ் ஷிப்பில் விண்வெளிக்குச் சென்றனர். ஜூன் 7இல் விண்வெளியை அடைந்த இவர்கள், ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு ஜூன் 14 இல் பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், 60 நாட்களைக் கடந்தும் பூமிக்குத் திரும்பாததால் நாசா தவித்து வருகிறது.
ஸ்டார் லைனரில் ஹீலியம் வாயு கசிவின் காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்ப முடியாத சூழலில், நாசா பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனால் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது நாசா. ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது டிராகன் விண்கலத்தின் மூலமாக 4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டது. ஆனால், நாசா அனுப்பிய வைத்த இருவரையும் அழைத்து வர உதவி கேட்டதன் காரணத்தால் 2 பேரை மட்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்ப இருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன வீரர்கள் தங்களது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்குத் திரும்புவார்கள். அவர்கள் வரும் போது தான் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்குத் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை இவர்கள் விண்வெளியில் தான் கொண்டாடப் போகிறார்கள் எனத் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுனிதா வில்லியம்ஸ் நாசாவிற்கு வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், “விண்வெளியில் இருக்கும் குழுவோடு இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டிற்குத் திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இருப்பினும், விண்வெளியில் சுற்றிக் திரிவதும், மிதப்பதும் மிக நன்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு 1990 இல் விண்வெளி நிலையத்தில் அதிகபட்சமாக இரஷ்யாவைச் சேர்ந்த வலேரி பாலியாகோவ் மிர் 437 நாட்களும், அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ 371 நாட்களும் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.