Do you know which country celebrates Valentine's Day throughout the year? https://www.oruthuli.com
ஸ்பெஷல்

வருடம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நாடு எது தெரியுமா?

நான்சி மலர்

லகில் உள்ளவர்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரே மாதிரி பயணித்துக் கொண்டிருக்கையில், தென்கொரியர்கள் மட்டும் அனைத்தையும் வித்தியாசமாக செய்பவர்களாக உள்ளனர். அப்படித்தான் உலகம் முழுவதும் பிப்ரவரி 14ல் வேலன்டைன்ஸ் டே கொண்டாடினால், தென் கொரியர்கள் மட்டும் வருடத்தில் 12 வேலன்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் 14ம் தேதி இவர்களுக்கு வேலன்டைன்ஸ் டேதான்.

ஜனவரி - டைரி டே / கேன்டில் டே: ஜனவரி மாதத்தில் வரும் 14ம் தேதி காதலர்களும், நண்பர்களும் தங்களுக்குள் டைரி அல்லது கேன்டிலை கொடுத்து மகிழ்வார்கள். இது எதற்காக என்றால் வருடம் முழுதும் நிகழப்போகும் நல்ல விஷயங்களை எழுதுவதற்காகவாம். இந்த நாளை, ’கேன்டில் டே’ என்றும் கொண்டாடுவதுண்டு. இந்நாளில் அழகழகான மெழுகுவர்த்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்வார்கள்.

பிப்ரவரி - வேலன்டைன்ஸ் டே: பிப்ரவரி மாதம் அனைவரும் கொண்டாடுவது போலவே வேலன்டைன்ஸ் டே கொண்டாடப்படும். எனினும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்குவதற்கு பதில் பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆணுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வார்கள். சில சமயங்களில் இனிப்புகளை பெண்களே செய்து தனக்குப் பிடித்த ஆணுக்கு கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் - ஒயிட் டே: இந்த மாதத்தில் ஆண்களுடைய முறையாகும். ஆண்கள் தங்களுக்குப் பிடித்த பெண்ணுக்கு இனிப்பு வாங்கிக் கொடுக்க வேண்டும். மேலும், வேலன்டைன்ஸ் டே அன்று இனிப்பை யாரிடமிருந்து வாங்கிக் கொண்டார்களோ அவர்களுக்கு இப்போது திருப்பி கொடுக்கும் நேரமாகும்.

ஏப்ரல் - பிளேக் டே: இந்த நாளை துக்க நாளாகக் கருதுகிறார்கள். இந்த நாளில் யாருக்கெல்லாம் பிப்ரவரி மற்றும் மார்ச்சில் இனிப்புகள் கிடைக்கவில்லையோ அவர்களெல்லாம் தங்களின் தனிமையான வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டு பிளேக் பீன் நூடுல்ஸான, ஜெஜாங்மியோனை சாப்பிடுவார்கள்.

மே - ரோஸ் டே / எல்லோ டே: இந்த நாளில் காதலர்கள் மஞ்சள் நிற உடை அணிந்து தங்கள் காதலர்களுக்கு ரோஜா பொக்கேவை பரிசளிப்பார்கள்.

ஜூன் - கிஸ் டே: ஜூன் 14ம் தேதியை முத்த நாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாளில் காதலர்கள் தங்களுக்குள் முத்தத்தை பரிமாறிக்கொள்வார்கள்.

ஜூலை - சில்வர் டே: இந்த நாளில் காதலர்கள் தங்களுக்கு வெள்ளி மோதிரத்தை பரிமாறிக்கொள்வார்கள். இது அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதற்கான சத்திய பிரமாணம் போன்றதாகும். தங்கள் பெற்றோரிடம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

ஆகஸ்ட் - கிரீன் டே: காதலர்கள் இன்றி தனிமையில் வாழ்வோர் சோஜூ என்னும் பச்சை நிற பாட்டிலில் கிடைக்கும் மது பானத்தை அருந்துவார்கள். காதலர்களோ, இன்று தங்கள் ஜோடியுடன் இயற்கையை ரசிக்க சென்று விடுவார்கள்.

செப்டம்பர் - போட்டோ டே அல்லது மியூசிக் டே: இந்த மாதத்தில் தங்கள் காதலர்களுடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். போட்டோ பூத் போன்ற இடங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள். பின்பு கரோக்கிக்கு சென்று அந்த நாளை நிறைவு செய்வார்கள்.

அக்டோபர் - ஒயின் டே: காதலர்கள் ஒயினை பகிர்ந்து அருந்துவார்கள். தனிமையில் இருப்போர் அப்படியே முழுவதுமாக அருந்திவிட்டு செல்வார்கள். ஆக, மொத்தத்தில் இந்த நாள் திராட்சை ரசம் அருந்தும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் - மூவி டே: இந்த நாளில் தன்னுடைய காதலரை படத்திற்குக் கூட்டி செல்வதோ அல்லது வீட்டிலேயே படம் பார்த்தோ கொண்டாடுவார்கள்.

டிசம்பர் - ஹக் டே: இந்த நாளில் தனக்குப் பிடித்தவர்களை கட்டித்தழுவி கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். தனக்காக ஒருவர் இருப்பதை எண்ணி கடவுளுக்கு நன்றி கூறுவார்கள்.

என் சியோல் டவர்: தென்கொரியாவில் இந்த இடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நம்சான் மலையில் அமைந்திருக்கும் இந்த கோபுரம் கடல் மட்டத்திலிருந்து 479 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கிருந்து சியோலின் அழகை ரசிக்கலாம். மேலும் காதலர்கள் தங்கள் பெயரை பூட்டிலே எழுதி இங்கே மாட்டி வைப்பது வழக்கம்.

முரல் வில்லேஜ், சியோல்: தென் கொரியாவிலுள்ள இந்த இடத்தில் நிறைய சுவர் ஓவியங்கள் இருப்பதால், காதலருடன் இங்கு வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

SCROLL FOR NEXT