சென்னை சென்ட்ரல், ஹென்றி இர்வின் 
ஸ்பெஷல்

சாதாரண சென்னையை மாநகரமாக மாற்றியவர் யார் தெரியுமா?

ஆகஸ்ட் 22, சென்னை தினம்

கோவீ.ராஜேந்திரன்

1639ம் ஆண்டில் எழும்பூருக்கு அருகில் கடல் முகத்துவாரத்தை அடையக்கூடிய ஒரு சிறிய நிலப்பகுதி ஆங்கிலேயருக்கு வணிக நோக்கத்திற்காக வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பகுதியில் வணிக நோக்கங்களுக்காக புனித ஜார்ஜ் கோட்டை நிறுவப்பட்டது. வெங்கடபதி நாயக்கரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த கடற்கரை பகுதிகளான வடக்கில் பழவேற்காடு முதல் போர்ச்சுக்கீசிய குடியேற்றப் பகுதியான சாந்தோம் வரை புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் அவரது தந்தை சென்னநாயக் நினைவாக சென்னப்பட்டினமாக உருவெடுத்தது. ஆங்கிலேயர்கள் இதையும் வாங்கி மதராஸ் பட்டினமாக்கினார்கள். எதற்காக தெரியுமா? நேரடியாக மிளகு வியாபாரம் செய்வதற்குத்தான். பல சிறிய ஊர்கள் சேர்ந்ததுதான் ஆரம்ப கால சென்னை. அதை மாநகரமாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.

பிரிட்டிஷ் இந்தியாவின் பொதுப்பணித் துறையில் ஆர்க்கிடெக்டாக பணியாற்றியவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி இர்வின். ஆங்கிலேயர்களின் கோடைக் கால தலைநகரமாக இருந்த சிம்லாவில் பல அரசுக் கட்டடங்களை வடிவமைத்தவர் இவர்தான். தாஜ்மகாலுக்கு பிறகு இந்தியாவில் உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மைசூர் அரண்மனையை சீரமைத்து மறு வடிவமைத்தவரும் இவர்தான்.

1864ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் பொதுப்பணித் துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் இந்தியாவில் பணியமர்த்தப்பட்டார். நாக்பூரில் இவர் முதன்முதலாக பணியாற்றினார். அப்போது அவர் கட்டிய பஞ்சமாரி என்ற இடத்தில் கட்டிய சர்ச் பெரும் புகழ் பெற்றது. பின்னர் சிம்லாவில் பணியாற்றினார். அதன் பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டார். சென்னை நகரத்தையும் வடிவமைத்தவர் இவர்தான்.

தற்போதும் சென்னை என்றால் அதற்கு அடையாளமாக இருப்பது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்தான். அதை வடிவமைத்தவர் ஹென்றி இர்வின்தான். எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை இந்தியாவில் முக்கிய மற்றும் நூற்றாண்டை கடந்த பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் 1905ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, 1908ம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்தது. இந்த கட்டடத்தை கட்டி முடித்த  முதன்மை என்ஜினீயர் ஹென்றி இர்வின்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களுள் ஒன்று. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், சென்னை நகரின் மிகப் பழைமையான கட்டடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்த இரயில் நிலையத்தை வடிவமைத்தவரும் ஹென்ரி இர்வின்தான். இதுவே இந்திய துணைக்கண்டத்தில் மிகப் பழைமையான ரயில் நிலையமாகும். இது மட்டுமல்ல,  எழும்பூர் மியூசியம், கன்னிமாரா நூலகம், விக்டோரியா ஹால், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சட்ட கல்லூரி கட்டடங்கள், தென்னக ரயில்வேயின் தலைமையகம் என்று இன்று நாம் சென்னைக்கு அடையாளமாகக் குறிப்பிடும் பழங்கால கட்டடங்கள் அனைத்தும் இர்வின் கைவண்ணத்தில் உருவானதுதான்.

1888ல் அடித்த ஒரு புயலில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கம் முற்றிலும் சேதமடைந்தது. சென்னை கிரிக்கெட் கிளப் இர்வினை சீரமைத்துத் தரும்படி அப்போதைய அரசாங்கத்தை வலியுறுத்த 16,500 ரூபாய் எஸ்டிமேட்டில்  இர்வின் சீரமைத்து தந்ததுதான் தற்போது நாம் கிரிக்கெட் பார்த்து மகிழும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். அதற்காக இர்வின் பெற்றது 250 ரூபாய் ஊதியம் மட்டுமே.

1841ல் அயர்லாந்து நாட்டில் பிறந்த ஹென்றி இர்வினுக்கு 6 பெண் குழந்தைகள். அதோடு, அவருக்கு குதிரைகள் மீது அலாதி விருப்பம். "நிறைய குதிரைகள், நிறைய மகள்கள் எனக்கு வாய்த்து இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இரண்டுமே செலவு பிடிக்கும் சமாச்சாரங்கள்" என அவ்வப்போது ஜோக் அடிப்பாராம் ஹென்றி இர்வின். இவருக்கு குதிரை பந்தயத்தின் மீது மட்டும் ஆர்வமில்லை, துப்பாக்கி சுடுதல், வேட்டையாடுதல், கிரிக்கெட், ஹாக்கி என அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் உண்டு. 25 ஆண்டுகள் பொதுப்பணித் துறையில் பணியாற்றி சீர்மிகு சென்னையை உருவாக்கி பெருமை பெற்ற இர்வின் தனது ஓய்வு காலத்தை ஊட்டியில் கழித்தார். அங்கேயே காலமும் ஆனார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT