பாரதிதாசன் தமிழ் இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது உண்மையான பெயர் கனக சுப்புரத்தினம். பாரதிதாசனின் படைப்புகள் சமூக நீதி, பெண்கள் கல்வி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் உரிமைகள் ஆகியவற்றை ஆதரித்தன.
பாரதியார் மீது கொண்ட அதீத பிரியத்தினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர். பாரதிதாசன், கிண்டல்காரன், கிறுக்கன், கண்டழுதுவோன் என்று புனைப்பெயர்களில் எழுதினார். தமிழை ஒரு தாய்மொழியாக மட்டுமின்றி, ஒரு தெய்வமாகவும் கருதி, தமிழ்த்தாய் என்ற கருத்தை வலியுறுத்தினார். அவரது படைப்புகளில், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு மற்றும் புதிய ஆத்திசூடி போன்றவை சிறப்பிடம் பெற்றவை. தனது மனைவியை ‘தெய்வசக்தி’ என்று அழைத்து அவரது படைப்புகளில் அவரைப் போற்றினார். அதன் மூலம் பெண்களின் மதிப்பை உயர்த்த முயற்சித்தார். ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்கிற தேன் சொட்டும் பாடல் வரிகளை எழுதியவர் பாவேந்தர்.
‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்னும் கருத்தை மையமாக வைத்து பாரதிதாசன் தனது, ‘குடும்ப விளக்கு’ நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அன்பு எனும் நூலால் பின்னப்பட்டு பாசவலையில் கட்டுண்டிருக்குமாறு பணித்துள்ளார். தமிழ் ஆசிரியர், கவிஞர், திரை கதாசிரியர், அரசியல்வாதி, எழுத்தாளர் என பல்வேறு பரிமாணங்களில் தமிழ் மொழியின் சிறப்பை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், தனது படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
சிறு வயதில் தனது தோழர் சிவாவுடன் சேர்ந்து பல குறும்புகள் செய்தார் கவிஞர். ஒரு சமயம் அவர்கள் ஊரில் வீட்டு விசேஷத்திற்காக ஒரு வீட்டின் முன்பு வாழைமரம் தோரணம் கட்டியிருந்தனர். இரவில் கவிஞரும் அவருடைய நண்பரும் சேர்ந்து வாழை மரங்களை அவிழ்த்து வேறு ஒரு வீட்டில் கொண்டு போய் கட்டி விட்டார்கள். அதோடு, அந்த ஊர் சாவடியில் தங்கியிருந்த சன்னியாசிகள் மற்றும் வறியவர்களிடம், ‘வாழைமரம் கட்டியிருக்கும் அந்த வீட்டில் விருந்து’ என்று கூறி விட்டு வந்தனர். மறுநாள் காலையில் தங்கள் வீட்டில் வாழைமரம் கட்டியிருந்ததும், சன்னியாசிகளும் ஏழை எளியவர்களும் கூடி விடவும் ஒன்றும் புரியாமல் வீட்டுக்காரர்கள் திகைத்துப் போனார்கள்.
தனது தினசரி வாழ்க்கையிலும் நயம்படப் பேசுவதில் வல்லவர். அவருடைய மகனுக்குத் திருமணம் ஆகி சில வருடங்களில் ஏதோ மனஸ்தாபம் காரணமாக தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் அவரது மகன் குறித்து கேட்க பாவேந்தர், ‘அவர் இப்போது சுயேட்சையாக இயங்குகிறார்’ என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.
ஒரு சமயம் அவருக்குத் திருமண பத்திரிக்கை ஒன்று வந்திருந்தது. அதில் வருடம், மாதம், தேதி குறிப்பிட்டு திங்கட்கிழமை அன்று என்று இருந்தது. ‘அன்று’ என்றால் இல்லை என்ற பொருள் உண்டு தமிழில். ‘எதிர்மறையான சொல் திருமணப் பத்திரிக்கையில் தேவையா?’ என்று கேட்டார் பாவேந்தர். ‘இத்தனாம் தேதியில் திருமணம் என்று குறிப்பிடலாம்’ என்று சொன்னார்.
அவருடைய உயிர் பிரிவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க டாக்டர் மு.வரதராசனார் வந்திருந்தார். உடல் நிலை சரியில்லாத அந்த நேரத்தில் கூட, ‘புலவர் குழுவின் கூட்டம் பெங்களூரில் நடக்கப்போவதாக அறிந்தேன். தமிழ்நாட்டின் சிறந்த இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியை அங்கே உள்ள தமிழ் பகைவர்கள் பாட விடாமல் தடுத்து கலவரப்படுத்தி விட்டார்கள். அந்த செயலுக்கு நான் கண்டனக் கூட்டம் நடத்தினேன். அந்த ஊரில் போய் ஏன்புலவர் குழு கூட்டத்தை நடத்த வேண்டும்? வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்று கூறினார். இறக்கும் தருணத்தில் கூட தமிழ் உணர்வோடு பாவேந்தர் இருந்தார்.