பிரான்ஸில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகாரா 250.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இதையடுத்து போலந்து நாட்டைச் சேர்ந்த எமிலியா பாப்ஸ்கா வெள்ளிப் பதக்கமும் ஸ்வீடனின் அனா நோா்மன் வெண்கலமும் வென்றனா்.
இந்த போட்டியில் அவனி லெகாரா தங்கம் வென்றதன் மூலம் தனது முந்தைய சாதனையான 249.6 புள்ளிகளை முறியடித்து கூடுதல் புள்ளிகள் பெற்றுள்ளார். இதையடுத்து 2024- ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெற அவனி தகுதி பெற்றுள்ளார்.
பாரா உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்றது குறித்து அவனி லெகாரா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:
இந்தியாவுக்காக இந்தப் பதக்கத்தை வென்றது பெருமையாக உள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
-இவ்வாறு அவனி லெகாரா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த அவனி லெகாரா (வயது 20), கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கார் விபத்து காரணமாக முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.