Meher Baba 
ஸ்பெஷல்

44 ஆண்டுகள் எவரிடமும் பேசாமல் இருந்த மெகர் பாபா! ஜூலை 10 - Silence Day!

தேனி மு.சுப்பிரமணி

ஜோராஷ்ட்ரிய சமயத்தைச் சேர்ந்த சேரியர் இரானி மற்றும் சிரீன் இரானி இணையர்களுக்கு, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் 1894 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாளன்று இரண்டாவது மகனாகப் பிறந்தவர் மெர்வான் ஷெரியார் இரானி. இவர் தான் படிக்கும் காலத்தில் பல மொழிகளில் பேசத் தெரிந்து கொண்டதுடன், ஹஃபீஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்சி பைஷே ஷெல்லி ஆகியோரின் கவிதைகளை விரும்பிப் படித்தார். பல்வேறு கவிதைகளை எழுதியதுடன், இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞராகவும் இருந்தார். 

அவரது 19 வது வயதில், ஹஸ்ரத் பாபஜான் என்ற ஒரு வயதான பெண் முஸ்லீம் துறவியைச் சந்தித்தார். அந்த முஸ்லீம் பெண் துறவிக்கு, மெர்வான் பிற்காலத்தில் ஒரு ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்வார் என்று தோன்றியது. உடனே அந்தப் பெண் துறவி, அவரை அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல் குறித்த சுய நினைவில்லாமல் 'தெய்வீக ஆனந்தம்' எனும் நிலையினை அடைந்தார் மெர்வான். ஒன்பது மாத காலம் வரை அவரிடம் அந்த ஆனந்த நிலை நீடித்திருந்தது. 

அதன் பின்னர், அவர் உபாஸ்னி மஹாராஜ் என்பவரைச் சந்தித்தார். அவர், மெர்வானுக்குக் கடவுளை உணர்தல் பற்றியும், அந்த அனுபவம் குறையாமல் செயல்படவும் வழிகாட்டினார். அடுத்தச் சில ஆண்டுகளில் அவர், தாஜுதீன் பாபா, நாராயண் மஹாராஜ், ஷீரடியின் சாய்பாபா ஆகியோரைச் சந்தித்து, ஆன்மிகத்தில் புதிய அனுபவம் பெற்றார். ஹஸ்ரத் பாபஜான், உபாஸ்னி மஹாராஜ், தாஜுதீன் பாபா, நாராயண் மஹாராஜ் மற்றும் ஷீரடியின் சாய்பாபா ஆகியோரைத் தனது ஐந்து வழிகாட்டிகளாகக் கொண்டு செயல்படத் தொடங்கினார். 

1920 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஹமத் நகரில் ஆன்மிக அமைப்பு ஒன்றை உருவாக்கி, அந்த அமைப்பின் மூலம் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுச் சேவைத் திட்டங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார் மெர்வான். அனைத்தையும் கட்டணமின்றி, அனைத்துச் சாதி, சமயத்தினருக்கும் பயனளிக்கும் வழியில் செயல்படுத்தினார். 1922 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவருடைய 27 ஆம் வயதில், அவரது ஆன்மிகக் கொள்கைகளை ஏற்ற சிலரை சீடர்களாக ஏற்றுக் கொண்டார். அவரது சீடர்கள் அவருக்கு, இரக்கமுள்ள தந்தை எனும் பொருளிலான 'மெஹர் பாபா' என்ற பெயரைச் சூட்டி அழைக்கத் தொடங்கினர். 

1922 ஆம் ஆண்டில், மெஹர் பாபாவும் அவரது சீடர்களும் மும்பையில் குருவின் வீடு என்று பொருள் தரும் மன்சில்–இ-மீம் ஒன்றை நிறுவினர். அங்கு, பாபா தனது சீடர்களிடமிருந்து கடுமையான ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கோரும் நடைமுறையைத் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து, பாபாவும் அவரது குழுவினரும் அகமது நகருக்கு வெளியே சில மைல் தொலைவில் உள்ள பகுதிக்குக் குடி பெயர்ந்தனர. அதற்கு அவர், ஆசீர்வாதத்தின் தோட்டம் என்று பொருள் தரும் மெஹராபாத் என்று பெயரிட்டார். அந்த ஆசிரமம் அவரது சமூக, ஆன்மிகப் பணிக்கான மையமாக மாறியது. 

மெகர் பாபா 1925 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி முதல் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கத் தொடங்கினார். அவர் தனது சீடர்களுடன் நீண்ட காலம் தனிமையில் கழித்தார். அவர் பேசாமல் அமைதியாக இருந்த காலங்களில் இந்தியா முழுவதும் பயணம் செய்து ஏழைகள், தொழுநோயாளிகள், மனநலப் பாதிப்புள்ளவர்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்து வந்தார். அவரது  பணிகளுக்காகப் பல இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கினார். இந்தியாவுக்கு வெளியே தெற்குக் கரோலினாவிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனுக்கு அருகேயும் இரண்டு ஆசிரமங்களை உருவாக்கினார். 

அவர் பேசாவிட்டாலும், எழுத்துப் பலகைகளில், எழுதிக் காண்பித்தும், சில தனிப்பட்ட செய்கைக் குறியீடுகளின் மூலம் சீடர்கள், தன்னைத் தேடி வருபவர்களிடம் தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொண்டார்.

அன்பு, தூய்மை, பொதுச்சேவை மூலம் ஆன்மிக உயரத்தை அடைய முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கிய அவர், மனித வரலாற்றில் பல முக்கியமான வேளைகளில் கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதாகக் கூறினார்.

ஏழைகள், நோயாளிகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், மனநோயாளிகள் எனத் தேடிப்போய்த் தனது சேவைகளைச் செய்த மெகர் பாபா, தொழுநோயாளிகளின் கால்களைக் கழுவுவதற்காகக் குனியும் போது, “உங்களின் கால்களில் பணிகிறேன்.. அதன் மூலம் உங்களிடம் உள்ள கடவுளைப் பணிகிறேன்” என்று கூறியிருக்கிறார். அவர் தீண்டப்படாத மக்களாகக் கருதப்பட்டவர்களின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து சாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடினார்.

1949-ம் ஆண்டில் மெகர் பாபா, தனது ஆசிரம அமைப்புகளை முழுவதுமாகக் கலைத்தார். அவற்றுக்குச் சொந்தமான சொத்துகளைத் தானமாக அளித்தார். அஹமது நகருக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் உள்ள சிறு நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டார். இந்தப் பருவத்தை ‘புதுவாழ்வு’ என்று அறிவித்துக் கொண்டார்.

மேற்கு நாடுகளில் சாதாரண மக்களிடையே, போதை மருந்துகளை உட்கொள்வதின் மூலம் ஆன்மிக அனுபவங்களை அடைய முடியும் என்ற தவறான நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனால், போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருந்த காலத்தில், போதை மருந்துகள் மூலமாகக் கடவுளை அடைய முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது என்றும் அறிவித்தார். “கடவுள் எல்லாரிடத்திலும் இருக்கிறார் என்பதை தனது அன்பு உங்களுக்கு ஒரு நாள் உணர்த்தும்” என்பதே அவரது வாக்காக இருந்தது. 

1969 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் மெகர் பாபா தனது பூதவுடலிலிருந்து நீங்கினார். இன்றும் அஹமது நகருக்கு அருகே மெகராபாத்தில் அமைந்துள்ள மெகர் பாபாவின் சமாதிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

1925 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் முதல் 1969 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் நாள் வரை 44 ஆண்டுகள் எவரிடமும் பேசாமல் இருந்த மெகர் பாபாவினுடைய ஆன்மிகக் கருத்துகளிலும், கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள், அவர் அமைதியாக இருக்கத் தொடங்கிய ஜூலை 10 ஆம் நாளைத் தங்களுக்கான அமைதி நாளாகக் (Silence Day) கொண்டு, அன்றைய நாளில் யாரிடமும் பேசாமல் இருப்பதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT