Marudhu Brothers Memorial Day 
ஸ்பெஷல்

ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மருது சகோதரர்கள் நினைவு தினம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர்கள் பெரிய மருது, சின்ன மருது என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள். சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியாரின் படைத்தளபதியாக இருந்து அவர்களுக்குப் பின்னர் சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள்.

ஆங்கிலேயர்களை இந்த மண்ணை விட்டு விரட்ட வேண்டும் என்று போரிட்டதால் 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள். பின்பு மூன்று தினங்கள் கழித்து 27ம் தேதி  இவர்கள் உடல், இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்ப்புறம் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இவர்களுடைய நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று மருது பாண்டியர் குரு பூஜை விழா நடைபெறும்.

ஆங்கிலேயர்களை நம் மண்ணில் இருந்து விரட்டி மீண்டும் வேலு நாச்சியாரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் மருது சகோதரர்கள். இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். 1785 முதல் 1801 வரை ஆயுதம் தாங்கி போராடினார்கள். இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்து திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயர்களின் அதிருப்திக்கும், கோபத்திற்கும் உள்ளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவிலாகும்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகிலுள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற பழனியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15ல் பெரிய மருது பிறந்தார். ஐந்து ஆண்டுகள் கழித்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். இருவரும் சிவகங்கை சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர் படையில் வீரர்களாக சேர்ந்து தங்கள் திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தைக் கண்டு மெச்சிய மன்னர் மருது சகோதரர்களை தனது படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772ல் ராமநாதபுரத்தை கைப்பற்றியதும் சிவகங்கையின் மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலில் முத்து வடுகநாதர் இறந்ததால் அவரது பட்டத்தரசி வேலு நாச்சியார், மகள் மற்றும் அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையுடன் சேர்ந்து திண்டுக்கல் அருகில் உள்ள விருப்பாட்சி காட்டுக்கு தப்பிச்சென்று காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டே தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், கும்பினியார், தொண்டைமான் ஆகியோரின் படைகளை வெற்றி கண்டு 1780 சிவகங்கை சீமையை மீட்டு வேலு நாச்சியாரை அரியணையில் அமர்த்தினர்.

ஆங்கிலேயர்களின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் உள்ளான மருது சகோதரர்கள் 1801ம் ஆண்டு அக்டோபர் 24 அன்று தூக்கிடப்பட்டனர். இவர்களது முழு உருவ கற்சிலை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறம் அமைந்துள்ளது.எதிர்புறம் அவர்களுடைய சமாதியும் அமைந்துள்ளது.  இந்திய அரசு 2004ம் ஆண்டு அக்டோபர் 24ம் நாள் மருது சகோதரர்களை சிறப்பிக்கும் வகையில் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டது. இவர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுடைய நினைவிடத்தில் குரு பூஜை விழா 3 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT