உலகெங்கும் மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று (மே, 12) அன்னையர் தினம். பெற்ற தாயை கௌரவிக்கும் விதமாகவும், தங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தாயைப் போற்றும் விதமாகவும், அவர்களுக்கு மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள், சிறப்பு விருந்து என்று பலரும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அன்னையர் தினம் கொண்டாட மூலகாரணமாக இருந்தவர் அன்னா ஜார்விஸ் என்ற அமெரிக்கப் பெண்மணி. 1911ம் வருடம் முதல் அன்னையர் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல நாடுகளும், மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடினாலும், சில நாடுகளில் அவர்களின் பாரம்பரியம், நாகரிகம் கருதி மற்றொரு நாளில் கொண்டாடி வருகிறார்கள்.
கிரேட் பிரிட்டன்: இங்கு, ‘அன்னையர் தினம்’ தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பாலைவனத்தில் விரதமிருந்து 40 நாட்கள் கழித்ததை நினைவு கூறும் விதமாக கிறிஸ்துவர்கள், கிறிஸ்து உயிர்த்தெழும் நாளான ஈஸ்டர் வரை 40 நாட்கள் விரதம் இருப்பர். இந்த விரத நாட்கள் ‘லெண்ட்’ எனப்படும் தவக்காலம். இது மத்திய காலம் என்று சொல்லப்படும் 500 முதல் 1500 வரையான காலத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்த 40 நாட்களில், விரதம் ஆரம்பித்த பிறகு வருகின்ற நான்காவது ஞாயிற்றுக் கிழமை ‘தாய்மை ஞாயிறு’ என்று கொண்டாடி வந்தார்கள். இது மதத்தை அனுசரித்த நிகழ்ச்சியாக 1950 வரை கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நாட்களில் மற்றவர் வீடுகளில் பணி செய்யும் பெண்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தாயைப் பார்த்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். 1950லிருந்து இது எல்லோரும் கடைப்பிடிக்கும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த நாளில் ‘ஸிம்னல் கேக்’ என்ற பழத்தால் செய்யப்பட்ட கேக் செய்வது சிறப்பு அம்சம்.
மெக்ஸிகோ: ரஃபேல் அல்டுசின் என்ற செய்தித் தாள் நிறுவனர், மே மாதம் 10, 1922ம் வருடம் முதலில் அன்னையர் தினத்தை மெக்ஸிகோவில் ஆரம்பித்தார். இந்த நாள் தாய்மையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது. அன்னையர்க்கு வாழ்த்து அட்டைகள், பூக்கள், பரிசுப் பொருட்கள், பாரம்பரிய மெக்ஸிகன் உணவு மற்றும் மெக்ஸிகன் இசையுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஜப்பான்: ஜப்பானின் அன்றைய பேரரசர் எமரிட்டஸ் அகிஹிட்டோவின் தாயார் பேரரசி கோஜூனின் பிறந்த நாள் மார்ச் 6. ஆகவே, 1931ம் ஆண்டு முதல் இந்த நாள் அன்னையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் இந்தக் கொண்டாட்டங்கள் மேற்கத்திய நாடுகளின் தாக்கத்தால் நடக்கின்றன என்று தடை செய்யப்பட்டது. 1949 முதல் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ‘அன்னையர் தினம்’ கொண்டாட ஆரம்பித்தனர். இந்த கொண்டாட்டங்களில் சிறப்பு அம்சங்கள் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய முட்டையில் தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் கடவுளரின் பூ என்று போற்றப்படும் சிவப்பு கார்னேஷன் பூக்கள். இந்த பூக்கள் தாயின் அன்பையும், தியாகத்தையும் சித்தரிக்கின்றன.
எதியோபியா: இந்த நாட்டில் அன்னையர் தினம், மழைக்காலம் முடிந்த பிறகு, அக்டோபர், நவம்பர் நடுவில் மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி விருந்து மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் அம்மா சமைக்கின்ற உணவிற்கு ஆண் சிறுவர்கள் ஆடு அல்லது மாட்டுக் கறியும், பெண் குழந்தைகள் காய்கறிகள், பால் மற்றும் மசாலா வகைகள் கொண்டு வர வேண்டும்.
பெரு: இங்கு மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதைத் தவிர, இந்த நாளில் இறந்த பெண் சொந்தங்களை நினைவு கூறும் நாளாகவும் அனுசரிக்கிறார்கள். ஆகவே, பெண் உறவினரின் கல்லறைக்குச் சென்று மலரிட்டு, உணவு மற்றும் பான வகைகளை உட்கொள்வார்கள். இந்த நாளில், இடுகாட்டின் வாசலில் பலூன், பூக்கள் கடைகள் நிறைய பார்க்கலாம்.
தாய்லாந்து: இங்கு முதன் முதலில் அன்னையர் தினம் 1950ம் வருடம், ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால், 1976 முதல் ஆகஸ்ட் 12 அன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் தாய்லாந்தின் தாய் என்று போற்றப்படும் ராணி சிரிகிட் பிறந்த நாள். குழந்தைகள் தங்கள் தாய்க்கு இந்த நாளில் மல்லிகைப் பூ மாலை கொடுப்பது வழக்கம். வெண்மையான இந்தப் பூ, அன்பு மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. இந்த நாளில் புத்த துறவிகளுக்கு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தானம் கொடுப்பது வழக்கம். பள்ளிகள் அன்னையர்க்காக சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். நாடெங்கும் ராணியை கௌரவிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சி, அலங்கார அணி வகுப்புகள், வாண வேடிக்கைகள் நடைபெறும்.
பிரான்சு: 1920ம் வருடம் முதல் அன்னையர் தினம், பிரான்சு நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், அதற்கென்று குறிப்பிட்ட நாள் வரையறுக்கப்படவில்லை. 1950ம் வருடம், மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அல்லது ஜூன் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் என்று அரசு அறிவுறுத்தியது. மற்ற நாடுகளைப் போலவே இங்கும் பரிசுகள், வாழ்த்து அட்டைகள், மலர் பூங்கொத்துகள் அன்னைக்கு வழங்கப்படுகின்றன. தாயைப் போற்றும் கவிதைகள், இதய வடிவிலான கேக்குகள் இங்கு சிறப்பு.