பனிப்பிரதேசங்களில் வாழும் பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அக்டோபர் 23 அன்று உலகப் பனிச்சிறுத்தைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பனிச்சிறுத்தைகள் அதிகம் வாழும் இந்தியா, நேபாளம், பூடான், சீனா, மங்கோலியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 12 நாடுகள் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாளன்று கூடிய கூட்டத்தில், பனிச் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான பிஷ்கெக் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தன. அந்தக் கூட்டத்தில், அக்டோபர் 23 ஆம் நாளை, உலகப் பனிச்சிறுத்தைகள் நாளாகக் கடைப்பிடிப்பதென முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 23 ஆம் நாளில், உலகப் பனிச்சிறுத்தைகள் நாள் (World Snow Leopard Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பனிச்சிறுத்தை (Snow Leopard) என்பது ஒரளவிற்கு பெரிய பூனை வகையைச் சேர்ந்ததாகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில், உலகளாவிய நிலையில் இதன் எண்ணிக்கை தற்போது 10,000க்கும் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதன் எண்ணிக்கையானது 2040 ஆம் ஆண்டில் தற்போதுள்ள நிலையிலிருந்து மேலும் 10% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வாழ்விட அழிப்பு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் அச்சுறுத்தப்படுகிறது.
இது கிழக்கு ஆப்கானித்தான், இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியிலிருந்து தெற்கு சைபீரியா, மங்கோலியா மற்றும் மேற்கு சீனா வரை 3,000 முதல் 4,500 மீ (9,800 முதல் 14,800 அடி) உயரத்தில் அல்பைன் மற்றும் சபால்பைன் மண்டலங்களில், மிகவும் கடினமான நிலப்பரப்பில் வாழ்கின்றன. இந்தியாவில் லடாக், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இமயமலையிலுள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 1,00,146 சதுர கிலோ மீட்டர் பனிக்காடுகளில் பனிச்சிறுத்தைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் ஹெமிஸ் தேசிய பூங்கா, கங்கோத்ரி தேசிய பூங்கா, காங்சென்ட்சோங்கா தேசிய பூங்கா மற்றும் கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா ஆகியவை பனிச்சிறுத்தைகள் காணப்படும் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும்.
இந்தியாவில் கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பனிச்சிறுத்தைகள் தொடர்பாக அறிவியல் பூர்வமாக எடுக்கப்பெற்ற கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மிக அதிகபட்சமாக லடாக் இமயமலைப் பகுதிகளில் 477 பனிச்சிறுத்தைகள் உள்ளன. உத்தர்கண்டில் 124, இமாச்சலப் பிரதேசத்தில் 51, அருணாச்சலப் பிரதேசத்தில் 36, சிக்கிமில் 21, ஜம்மு-காஷ்மீரில் 9 பனிச் சிறுத்தைகள் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பனிச்சிறுத்தைகள் மாமிச உண்ணிகளாகும். அத்துடன் இவற்றின் இரையை வெறியுடன் வேட்டையாடக் கூடியவையும் ஆகும். எவ்வாறிருப்பினும், ஏனைய அனைத்துப் பூனைகளையும் போலவே, இவையும் சந்தர்ப்பத்திற்கேற்ப உண்ணும் இயல்புடையன. அழுகிய உடல்கள் மற்றும் உள்ளூர் சேமிப்பு மாமிசங்கள் உட்பட எந்தவகையான மாமிசத்தையும் இவை சாப்பிடக்கூடியவையாகும். இவற்றைவிட மூம்மடங்கு பெரிய மிருங்கங்களையும் கூட கொல்லக்கூடியத் திறமை படைத்த இவை, முயல் மற்றும் பறவைகள் போன்ற சிறிய இரையையேத் தேவைப்படும்போது எடுத்துக்கொள்கின்றன.
இங்கு பனிச்சிறுத்தை குறித்த மேலும் சில சுவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
பனிச்சிறுத்தைகள் தனித்து வாழும் உயிரினங்கள் என்பதுடன் திறமையாக வேட்டையாடக்கூடியவை. உயரமான இமயமலையின் கடுமையான மற்றும் குளிர்ந்த காலநிலைக்கு மிகவும் ஏற்றவாறு வாழக்கூடியவை.
பனிச்சிறுத்தைகள் கர்ஜிக்காது. மாறாக, மிவ், ஹிஸ் மற்றும் 'சஃப்' எனப்படும் ஆக்ரோஷமற்ற கொப்பளிக்கும் ஒலியை உருவாக்குகின்றன.
பனிச்சிறுத்தைகள் தங்கள் நீண்ட தடிமனான வாலைச் சுற்றி வைத்துக் கொள்வதன் மூலம், தங்கள் உடலைச் சூடாக வைத்துக் கொள்வதுடன் உடலைச் சமநிலைப்படுத்திக் கொள்கின்றன.
பனிச்சிறுத்தைகள் சாம்பல் அல்லது பச்சை நிற கண்களூடன் பெரிய பூனைகளைப் போன்றிருக்கின்றன.
பனிச்சிறுத்தை குட்டிகள் பிறந்ததிலிருந்து 9 நாட்கள் வரை பார்வையின்றியே இருக்கும்.
பனிச்சிறுத்தைக் குட்டிகள் 2 மாதங்கள் ஆனவுடன் முழு சுறுசுறுப்பாக இயங்கும். அதுவரை தாயுடனேயே இருக்கும்
பனிச்சிறுத்தைகளின் பரந்த, உரோமத்தால் மூடப்பட்ட பாதங்கள் இயற்கையான காலணிகளாகச் செயல்படுகின்றன.
பனிச்சிறுத்தைகள் அவற்றின் உடல் நீளத்தை விட ஆறு மடங்கு (9 மீட்டர் வரை) வரை பாயும் தன்மை கொண்டது.
பனிச்சிறுத்தைக்கு ஒரு நீலச் செம்மறி ஆட்டின் இறைச்சியை ஒரு வாரம் வரை உணவாக இருக்கும்.
இந்திய விலங்கியல் வல்லுநர்கள், ‘‘நகரமயமாக்கம், சுரங்கம், பருவநிலை மாறுபாடு காரணமாக பனிச்சிறுத்தைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. பனிச்சிறுத்தைகள் அதிகமுள்ள ஆப்கானிஸ்தான், மேற்கு சீனா, மங்கோலியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதிகளை விட, இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது’’ என்கின்றனர்.
இந்தியாவிலுள்ள பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்க நம் அன்றாட வாழ்வில் சிறிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த மாற்றங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்தும் போது, அவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
நீங்கள் இமயமலைக்குச் சுற்றுலா செல்லும்போது, சுற்றுச்சூழலுக்கும் அங்கு வாழும் வனவிலங்குகளுக்கும் அழிவை ஏற்படுத்தும் நெகிழிப் பொருட்கள், குப்பைகள் போன்றவைகளை வீசிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பனிச்சிறுத்தைகள் அவற்றின் அழகான முடிகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. மேலும் எலும்புகள் மற்றும் இறைச்சிக்காகவும் கொல்லப்படுகின்றன. இந்த கொடூரமான சட்ட விரோத வணிகத்தை நிறுத்த, அந்தப் பொருட்களை வாங்கி ஆதரிக்க வேண்டாம்.
பனிச்சிறுத்தைகள் இருப்பது இமயமலைச் சுற்றுச்சூழலின் நலத்திற்கு உதவியாக இருக்கின்றன என்பதைத் தங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் தெரிவியுங்கள்.