– ஓவியர் லலிதா
என் மனம் கவர்ந்த பெரும் சிறந்த காவியம் அமரர் கல்கியின், 'பொன்னியின் செல்வன்.' இந்த காவியத்தின் அனைத்துப் பகுதிகளுமே சுவையும் சுவாரசியம் மிகுந்தவைதான். எதை எழுத, எதை விட எனும் அளவுக்கு இன்பம் தரும் பெரும் காவியம் பொன்னியின் செல்வன்.
இந்தப் புதினத்தில் பழம் பெரும் எழுத்தாளர் கல்கி அவர்களின் மெல்லிய நகைச்சுவை இழையோடும் வர்ணனைகளை ஆங்காங்கே ரசிக்கலாம். அவற்றில் வந்தியத்தேவனும் பொன்னியின் செல்வரும் முதன் முதலாக மோதிக்கொள்ளும் காட்சி வெகு சுவாரசியம் மிகுந்தது. அந்தக் காட்சி என் மனதில் மெல்லிய சிரிப்பு அலைகளை எழுப்பியது.
மேலும், இளவரசர் விடாப்பிடியாக வந்தியத்தேவனின் இடுப்பிலிருந்து பலவந்தமாக ஓலையைப் பிடுங்கிக்கொள்வதும். வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைத் துரோகி என்று குற்றம் சாட்டுவதும் என் மனம் கவர்ந்த சுவையான நிகழ்வுகள்.
வீரம், விவேகம், நகைச்சுவை, காதல், கோபம், தாபம், வர்ணனை என நவரசங்களையும் பொன்னியின் செல்வன் நாவல் முழுமைக்கும் இழைத்து இழைத்துத் தந்திருப்பார் அமரர் கல்கி அவர்கள். பொன்னியின் செல்வன் நாவலில் என் மனம் கவர்ந்த பகுதிகள் எத்தனையோ இருந்தாலும், கல்கி எனும் அந்த மகா எழுத்தாளரின் நகைச்சுவை கலந்த எழுத்து நடையை என்னால் மறக்கவே முடியாது. அவை அனைத்தும் என் நினைவில் கலந்து விட்ட ஒன்றாகவே நான் நினைக்கிறேன்.