கவியரசரும், மெல்லிசை மன்னரும் பிறந்த தினம் இன்று. மிகப்பெரிய சாதனை புரிந்துவிட்டு ஆர்ப்பாட்ட மில்லாமல், சத்தமில்லாமல், எளிமையாக வாழ்ந்து, காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு விட்டுச்சென்றவர்கள் இவர்கள் இருவரும்.
மெல்லிசை மன்னர் ஏழு ஸ்வரங்களுக்குள் இன்றும் வாழ்கிறார். மெல்லிசை மன்னர் 300க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டும் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். மூன்றே மூன்று இசைக் கருவிகளைக் கொண்டும் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர். தனது தனித்தன்மை வாய்ந்த குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஒரே இசையமைப்பாளர். மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும் மனப்பக்குவமும் இவரைத்தவிர வேறு யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்களின் இசையில் இணைந்தும் இசையமைத்திருக்கிறார்.
'அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்குச் சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்குச் சாப்பிட நேரமில்லை' என்று விளையாட்டாக கூறுவார்கள். அந்த அளவிற்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலான 'நீராருங் கடலுடுத்த' என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் இன்றுவரை நீக்கமற நிறைந்திருப்பவர் எம்எஸ்வி அவர்கள்.
மெல்லிசை மன்னரின் பாடல்கள் அனைத்தும் நினைவிலிருந்து நீங்கா புகழ் அடைந்ததற்கு அப்பாடல்கள் எழுதிய கவியரசர் மிகப்பெரிய காரணம். இசையைப் பற்றி நுணுக்கமாகத் தெரியாதவர்களையும் பேசவைத்த பெருமை இவர்களுக்கு உண்டு. இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டு இருந்தாலும் இந்திய வரலாற்றில் குப்தர்கள்ஆட்சி காலத்தைத்தான் 'இந்தியாவின் பொற்காலம்' என்று சொல்வார்கள். அதுபோல இவரின் இசையில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்கள் வெளிவந்ததெல்லாம் தமிழ் திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய திரை இசை வரலாற்றில் கவிஞர் கண்ணதாசனுக்கு தனி இடம் உண்டு. இவரது பாடல்களில் கற்பனை வளமும் சொல்லாட்சியும், தத்துவங்களும், அனுபவங்களும், புதைந்திருக்கும். எம்எஸ்வி, கண்ணதாசன் கூட்டணியில் அமைந்த பாடல்களில் மனிதர்களின் பிறப்பு, இறப்பு, சோகங்கள், விரக்திகள், ஆசைகள், ஏமாற்றங்கள் என அனைத்தையும் உணரலாம்.
இவர்கள் இருவரிடமும் நல்ல நட்பு உண்டு. அதற்கு ஒரு உதாரணம்... இரவு 11 மணிக்கு எம் எஸ்.வி வீட்டுக்கு தொலைபேசி வந்தால் மறுமுனையில் கவிஞர் என்று அர்த்தமாம். "நீ எப்போ மேடையில் கச்சேரி பண்ணினாலும் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' பாட்டைத்தான் முதலில் பாடவேண்டும்" என்பாராம். "சரி" என்று கவிஞருக்கு அன்று கொடுத்த வாக்கை கடைசிவரை காப்பாற்றி வந்திருக்கிறார் எம்எஸ்வி அவர்கள். அதுமட்டுமல்லாமல் அந்த பாட்டை பாடி முடிக்கும்போது "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்..." என்று சற்றே மாற்றி உணர்ச்சியுடன் பாடுவாராம்.
கண்ணதாசன் அவர்கள் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம் திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்". 'மதன மோக ரூப சுந்தரி' என்ற ரீதியில் இருந்த பாடல்களை 'பொன்மகள் வந்தாள்' என்று பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் மாற்றிய வார்த்தை சித்தர்.
வார்த்தைகளை அவரைவிட சிக்கனமாக வேறு யாரும் கையாண்டிருக்க இயலாது. 'பேசுவது கிளியா' என்ற பாடல் நல்லதொரு உதாரணம். இரண்டிரண்டு வார்த்தைகளாய் அமைந்த சந்தத்தின் விந்தை அப்பாடல். 'பாடுவது கவியா' இல்லை பாரி வள்ளல் மகனா சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா... 'பாடுவது கவியா' என்று கண்ணதாசனின் கவி நயத்தைத் தம்பட்டம் அடிப்பதோடன்றி, பாடுகின்ற கதாநாயகனின் கொடுத்துச் சிவந்த கொடைத்தன்மை, அவனது கேரளத்து பூர்வீகம், அவன் தமிழகத்தில் அடைந்திருந்த சொல்லவொணா செல்வாக்கு, அத்தனையும் அழகுற எடுத்து இயம்பி இருந்தது. எட்டே வார்த்தைகளில் ஒருவனது சரித்திரத்தையே படம் பிடித்துக்காட்ட கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
கண்ணதாசனின் பாணி அலாதியானது அவருக்கு முடிச்சு போடவும் தெரியும். அவிழ்க்கவும் தெரியும். கேள்வியும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவர் கில்லாடி. 'உன் புன்னகை என்ன விலை' என்று கேள்விக்கு,
'என் இதயம் தந்த விலை' என்ற பதில் தொடர்ந்து வரும்.
'நதி எங்கே போகிறது' என்ற கேள்வியை எழுப்பிவிட்டு 'கடலைத் தேடி' என்ற பதிலையும் தருவார் கவிஞர். அவர் ஒரு 'perfectionist' அவர் போட்ட வார்த்தைக்கு ஈடாக வேறு ஒரு நல்ல வார்த்தை அவரால் மட்டுமே போட முடியும். நாம் போட்டால் அந்த imperfection காட்டிக் கொடுத்துவிடும்.
'உள்ளம் என்பது ஆமை' என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவார்த்த சிந்தனைக்கு ஒரு உரைகல்.
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு...
இல்லை என்றால் அது இல்லை' என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சுமத்தை எளிமையான வார்த்தைகளை உணர்த்தி இருப்பார் கவிஞர்.
'வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ' என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவ பாடம்தான் நமக்கு நினைவில் வரும்.
இவரின் தத்துவ பாடல்களான....
* நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
* அண்ணன் என்னடா தம்பி என்னடா
* ஆறு மனமே ஆறு
* போனால் போகட்டும் போடா
* தெய்வம் தந்த வீடு
* உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
* மாறாதய்யா மாறாது
* கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
* வீடு வரை உறவு
* மயக்கமா கலக்கமா
போன்ற பாடல்களையெல்லாம் எவர் ஒருவர் வாழ்க்கையில் சரியாக பின்பற்றி கடைப்பிடிக்கிறாரோ... அவருக்கு வாழ்க்கையில் வருத்தங்களும் இருக்காது... நெஞ்சில் உறுத்தலும் இருக்காது...
இசைக்கு இறப்பு இல்லை என உணர வைத்த இவர்கள் இருவருக்கும் அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.