உலகமெங்கும் மே 31ம் தேதி உலகப் புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் ஒன்று சேர்ந்து இந்நாளை உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் என்று அறிவித்தன. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகையிலை நுகர்வை குறைப்பதற்கான கொள்கைகளை உருவாக்கவும் உலக சுகாதார அமைப்பு தலைமையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் மனித இறப்புகளை தோற்றுவிக்கும் முக்கியமான காரணிகளில் புகையிலையும் ஒன்று. புதிய பூக்கள் கொண்ட சாம்பல் தட்டுகள் (ash tray) உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தின் பொதுவான அடையாளமாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் மக்கள் புகையிலை பழக்கத்தால் இறக்கின்றனர்.
ஒரு சிகரெட் சராசரி மனிதனின் ஆயுளில் 14 நிமிடங்களை கழிக்கும். ஒரு நாளைக்கு 20 சிகரெட்களை புகைப்பதன் மூலம் ஒருவரின் ஆயுளில் இருந்து 10 வருடங்கள் கழிந்து விடும்.
புகையிலையை புகைத்தல், மெல்லுகள் அல்லது முகர்தல் போன்ற எந்த வடிவங்களில் உட்கொண்டாலும் அவை அனைத்தும் சமமான அளவு தீங்கையே விளைவிக்கும். தொடர்ந்து புகையிலேயை உட்கொள்வதால் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, நாள்பட்ட இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் பல்வேறு வகையான புற்று நோய்கள் ஏற்படுகின்றன.
புகையிலையை உட்கொள்வதால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரித்து வருகிறது. பொது அணிவகுப்புகள், விவாதங்கள், தொலைக்காட்சி மற்றும் அச்சு விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அரசு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்கின்றன.
புகை பிடிப்பதால் அந்த குறிப்பிட்ட நபர் மட்டுமல்லாமல், அவரது குடும்பமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது ஒரு தவறான பழக்கமாகும். இதனால் பணம் வீணடிக்கப்படுவதுடன் உடல் நலத்திற்கும் கேடு விளைகிறது. மேலும், வாய் துர்நாற்றம், மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது மற்றும் இரத்த சோகை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
புகையிலையை கைவிடுவதாக உறுதிமொழி எடுப்பதும், புகையிலை கட்டுப்பாட்டு கொள்கைகளை ஆதரிப்பதன் மூலமும், புகையிலையின் தீங்கான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம், அதாவது சமூகத்தினரிடையே பரப்புவதன் மூலமும் தனி நபர்கள் இதற்கு சிறப்பாக பங்களிக்க முடியும்.