சுதந்திரம் https://ta.quora.com
ஸ்பெஷல்

சுதந்திரத்தின் வகைகள் மற்றும் தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவம்!

கலைமதி சிவகுரு

சுதந்திரமானது இயற்கை சுதந்திரம் மற்றும் சமூக சுதந்திரம் எனப்படுகிறது. சுதந்திரத்தின் சில வகைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

இயற்கை சுதந்திரம்: ஒரு மனிதன் தான் விரும்பியவற்றை செய்ய எந்த குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம்தான் இயற்கையான சுதந்திரம். இந்த சுதந்திரத்தை மக்களுக்கு அரசு அனுமதித்தால் நாட்டில் குழப்பமும், சட்ட மின்மையும்தான் எஞ்சி நிற்கும்.அது சுதந்திர நிலைக்கே எதிரானது. இதை சமுதாய ஒப்பந்தத்தின் கோட்பாளர்களான ஹாப்ஸ், லாக், ரூசோ ஆகியோர்கள் விளக்கினார்கள்.

சமூக சுதந்திரம்: சமூக அமைப்பில் அங்கம் வகிக்கும் மனிதர் அவர் வாழ்க்கையில் பெறும் சுதந்திரம் ஆகும். இது பொது நலன் கருதி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர் விரும்பியதை செய்யலாம் என்பதாகும். சமுதாயம் ஏற்றுக்கொண்டிருக்கும் கடமைகள், உரிமைகள் மற்றும் சலுகைகளை அரசும் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. சமூக சுதந்திரம் என்பது 7 வகைகளாக இருக்கிறது.

தனி மனித சுதந்திரம்: இது தனி மனிதருடைய வாழ்க்கையோடு தொடர்பு கொண்டது. ஒருவர் தான் விரும்பும் செயல் தடையின்றி செய்வதற்கு வழி வகுப்பது தனி மனித சுதந்திரம். அவ்வாறு செய்யக்கூடிய செயல் அம்மனிதரை  சமுதாயத்தில் தனித்திருக்கவும் செய்யக்கூடும்.

அரசியல் சுதந்திரம்: தாங்கள் விரும்பும் அரசை மக்களே தேர்ந்தெடுப்பது அரசியல் சுதந்திரத்தின் வெளிப்பாடு ஆகும். முழுத் தகுதியின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட சுதந்திரம், அரசாங்க பணியில் வேலை வாய்ப்பு பெற சுதந்திரம் போன்றவை ஆகும்.

வீட்டு சுதந்திரம்: இது குடும்ப அளவில் ஒரு மனிதரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியதாகும். மனைவியை உரிய மதிப்புகளுடன் நடத்துவது, பெற்ற குழந்தைகளை சரியாகப் பராமரித்து தகுந்த கல்வியைக் கொடுத்து சிறந்த குடிமகனாக்குவது, சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க சுயமாக இயங்கும் சுதந்திரம் ஆகியவற்றை கொண்டு  வாழ்க்கை நடத்துவது ஆகும்.

தேசிய சுதந்திரம்: எந்த ஒரு  தேசமும் மற்றொரு தேசத்தின் கீழ் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்பதே தேசிய சுதந்திரம்.

சர்வதேச சுதந்திரம்: சர்வதேச அளவில் போர் ஒழிப்பது, கொலை இல்லா உலகத்தை நிர்மாணிப்பது, சர்ச்சைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பது போன்றவை சர்வதேச சுதந்திரத்தின் வெளிப்பாடு ஆகும்.

பொருளாதார சுதந்திரம்: பொருளாதார பாதுகாப்பும், உணவிற்காக ஒருவர் சம்பாதிக்கும் வாய்ப்பும், நாளைய தேவைகளில் இருந்து ஒருவர் பாதுகாக்கப்படுவது பொருளாதார சுதந்திரம் ஆகும்.

தார்மீக சுதந்திரம்: பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைய அறிஞர்களும், ரூசோ, பென்ஸ், காண்ட், கிரீன், மற்றும் பொஸான்கே போன்ற பிற்காலத்திய அறிஞர்களும் சிந்தித்து கூறியதாவது, ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவம் உள்ளது. அவர் தன் ஆளுமையை மேம்படுத்தி கொள்ளவே எத்தனிக்கிறார். அதே சமயத்தில் அவர் பிறருக்காகவும் வாழ்பவராக இருத்தல் அவசியம். அதுவே பரிபூரண தன்னை அறிதல் எனப்படும்.

தனி மனித சுதந்திரத்தின் முக்கியத்துவம்: மனிதருடைய மனம்  அவருடைய தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது. இயக்கத்தின்போது எதிர்மறை விளைவுகள் நேருமாயின்  அவற்றை அவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெற்றிருக்க வேண்டும். சமுதாயம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்டதாக உள்ளது. அறிவார்ந்தவர்களும் சாமானியர்களும் பலசாலிகளும் பலவீனமானவர்களும் உள்ளனர். அதனால் அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது அவசியமாகிறது.

இத்தகைய அமைப்பில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உரிமைகளை, சுதந்திரங்களை அறிந்து ஏற்றுக்கொண்டு இயைந்து வாழ்வதால் மட்டுமே  ஒரு அரசு சரிவர இயங்கும். இச்சூழலில் தனி மனித சுதந்திரத்தின் முக்கியத்துவமும், அதனை பாதுகாக்க வேண்டிய அவசியமும் எழுகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT