விளையாடவேண்டும் என்று நினைவூட்டுவதற்காக சர்வதேச தினம் ஆறிவித்துள்ள ஐ.நா எல்லா வயதினரும் அவ்வப்போது விளையாடுவதற்கான நேரம் ஒதுக்க வேண்டும். இதற்கான அவசரத் தேவையை வலியுறுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் ஒரு சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதற்கு உலக மக்களை அழைத்துள்ளது. அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
இன்று தான் அந்த நாள். இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூம் 11ஆம் தேதியை விளையாட்டுகளுக்கான தினமாக அனுசரிக்கப்போவதாக ஐநா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐநா கூறி இருப்பதாவது:
11.06.2024 ஆகிய இன்று முதலாவது சர்வதேச ‘விளையாட்டுக்களுக்கான’ தினம். இனி ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் சர்வதேச ‘விளையாட்டுக்களுக்கான’ தினம் அனுசரிக்கப்படும்.
Play makes a better world என்ற மையக்கருத்தோடு இந்த முதலாவது ‘விளையாட்டுகளுக்கான’ தினம் அனுசரிக்கப்படுகிறது.
கேஷுவலாக தெருக்களில் நமக்குள்ளே விளையாடிக் கொள்ளும் விளையாட்டுக்கள் என்பது வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், நாடு, இனம், மொழி பாலினம் போன்ற எல்லா பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு பொதுவான ‘சமூகத்தின் மொழியாகும்’.
குறிப்பாக குழந்தைகளுக்கு, சமூகத்தில் பழகுதல், சுய கட்டுப்பாடு, பிரச்சனையை தீர்த்தல் மற்றும் சொந்த அதிர்ச்சிகளில் இருந்து விடுவித்துக் கொள்ளுதல் போன்றவற்றில் விளையாடுதல் முக்கியமானதாக உள்ளது. அறிவுப்புலம், உடற்கூறுகள், படைப்பாற்றல் ,சமூக மற்றும் மனவெழுச்சித் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் விளையாட்டுகளின் பங்கு இன்றியமையாததாகிறது. கற்றல் சூழ்நிலைகளிலும் கூட விளையாட்டுக்களின் மூலம் கற்றல் என்ற முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். கற்க வேண்டும் என்ற ஊக்கத்தினை அதிகரித்து நிலையான கற்றல் நிகழ்வதற்கு விளையாட்டுக்கள் பேருதவியாய் இருக்கின்றன என்கிறார்கள் கல்வியாளர்கள். சகிப்புத்தன்மை, விரிதிறன், சமூகத்தில் அனைவரையும் இணைத்துக் கொள்ளுதல், பிரச்சனையை தவிர்த்தல், அமைதியை நிலைநிறுத்துதல் போன்றவற்றிலும் விளையாட்டுக்களால் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்த முடியும்.
போர், சண்டைகள், புலம்பெயர்தல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வை மீண்டும் இயல்பாக்குவதில் விளையாட்டுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. விளையாடும் போதே ஒரு குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. இந்த காரணங்களினால் ஐநாவின் குழந்தைகளுக்கான உரிமைகள் அமைப்பின் ஆர்டிகிள் 31, விளையாடுவதை குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைளில் ஒன்றாக்கி உள்ளது.
விளையாட விடாமல் குழந்தைகளை தடுப்பது அவர்களது நலவாழ்வு மற்றும் வளர்ச்சி முன்னேற்றத்திற்குத் தடையாக மாறிவிடும்.
ஐநாவிடம் பேசியுள்ள குழந்தைகளில் 71% பேர் விளையாடுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்கள். தரமான நேரத்தைச் செலவிடுவதற்கும் புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்வதற்கும் விளையாட்டு உதவுவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இன்றைய குழந்தைகளின் தாத்தா பாட்டிகள் குழந்தைகளாக இருந்த காலகட்டத்தில் நான்கில் மூன்று குழந்தைகளுக்கு வீதிகளில் சென்று விளையாட வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்ததாகவும், தற்காலத்தில் நான்கில் ஒரு குழந்தைக்கு தான் அந்த வாய்ப்பு கிடைப்பதாகவும் ஐநா சொல்கிறது.
41% குழந்தைகளைப், பெற்றோர்களும் சுற்றியுள்ள மற்ற பெரியவர்களும் விளையாட வேண்டாம் என்று சொல்லித் தடுப்பதாகவும் ஐநா வருத்தம் தெரிவிக்கிறது.
இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில், இன்றைய அவசர டெக்னோ உலகில், அனைத்து வயதினரும் குறிப்பாக குழந்தைகள் வீதிகளில் சென்று விளையாட வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வாதிடுகிறது. அதற்காகத்தான் இந்த தினம்! இந்த சர்வதேச விளையாட்டுக்களுக்கான தினம் உலகளாவிய, தேசிய, மற்றும் உள்ளூர் அளவுகளில், வீதியில் சென்று விளையாடுவதற்கான முக்கியத்துவத்தை உயர்த்தி பிடிக்கும்.
இதைக் கல்வியோடும் சமூகத்தோடும் ஒருங்கிணைக்கத் தேவையான கொள்கைகளையும் பயிற்சிகளையும் நிதியினையும் ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்போடு நாமும் ஐநாவுடன் கரம் கோர்த்து முதலாவது சர்வதேச விளையாட்டுக்களுக்கான தினத்தை அனுசரிப்போமே!
குழந்தைகள் வீதிகளில் சென்று விளையாடுவதற்கு ஏதுவான பாதுகாப்பான வீதிகளை முதலில் உருவாக்க முனைவோம்.
பெரியவர்களாக மாறி வருகிற மழலைகளை மீட்டெடுப்போம்.
குழந்தைகளை குழந்தைகள் ஆக்குவோம்.
விளையாடுவதே குழந்தைகளின் வேலை என்பதை உணர்வோம்.
பெரியவர்களாக வளர்ந்து விட்டாலும் நாமும் வீதிகளில் இறங்கி விளையாடுவது பூசல்களற்ற நல்லுலகை உருவாக்கும் தானே!
பரபரப்பான வாழ்வில் நாமும் ஒரு சிறு பிரேக் கிடைக்காதா என்று ஏங்குகிறோம் தானே..
International day of play ஒரு வரவேற்கத்தக்க முன்னெடுப்பாக தான் தோன்றுகிறது! உங்களுக்கு??..